தனக்கு திருமணம் என வதந்தி பரப்பியவர்களைக் கண்டித்து நடிகை சாய் பல்லவி பதிவிட்டுள்ளார்.
கேவலமான நோக்கம்!
“உண்மையில் நான் வதந்திகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஆனால் அது குடும்ப நண்பர்களை உள்ளடக்கியிருந்தால், நான் பேச வேண்டும். எனது படத்தின் பூஜை விழாவில் இருந்து ஒரு படம் வேண்டுமென்றே க்ராப் செய்யப்பட்டு, பணம் கொடுத்தும் கேவலமான நோக்கத்தோடும் பரப்பப்பட்டது.
எனது வேலை பற்றிய மகிழ்ச்சியான அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, இந்த வேலையில்லாத செயல்களுக்கு விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநருடன் இணைத்து வதந்தி
நடிகை சாய் பல்லவியும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் சிவகார்த்திகேயனின் 21ஆவது பட பூஜையில் இணைந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவருக்கும் திருமண வாழ்த்து தெரிவித்து கடந்த சில நாள்களுக்கு முன் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது சாய் பல்லவி பதிவிட்டுள்ளார்.
மருத்துவரான சாய் பல்லவி, கடந்த 2015ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் எனும் கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார்.
முன்னதாக கஸ்தூரி மான், தாம் தூம் ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் தோன்றியிருந்தாலும், பிரேமம் படம் அவருக்கு பெரும் ப்ரேக்காக அமைந்து மலையாள சினிமா தாண்டியும் பட்டிதொட்டியெல்லாம் அவரைக்கொண்டு சேர்த்தது.
எளிமையும் நடனமும்
தன் முதல் படத்திலேயே இளைஞர்களின் கனவு நாயகியாக சாய் பல்லவி உருவெடுத்த நிலையில், அவர் பிற மொழிகளில் எப்போது நடிப்பார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், தெலுங்கில் ஃபிடா (Fidaa) படத்தில் அறிமுகமான சாய், அக்கட தேசத்து ரசிகர்களால் முதல் படத்திலேயே கொண்டாடித் தீர்க்கப்பட்டார். அதன் பின் தமிழில் ஏ.எல்.விஜய்யின் தியா படத்தில் அறிமுகமான சாய், தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே, பாவக் கதைகள் ஆந்தாலஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தன் நடிப்பு, நடனம், எளிய தோற்றத்தால் தென்னிந்திய சினிமாக்களில் டாப் நாயகியாக வலம் வரும் சாய் பல்லவி, தற்போது தமிழில் முதன்முறையாக எஸ்.கே.21 படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். இது தவிர தெலுங்கில் நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக சாய் பல்லவி மீண்டும் தற்போது கைக்கோர்த்துள்ளார்.