விஜய் நேரடியாக முதலமைச்சரானது எல்லாம் பெரிய நிகழ்வு, இது மக்கள் அவர் மேல் வைத்துள்ள அளவுக்கடந்த நம்பிக்கையைக் காட்டுவதாக நடிகை ரோஜா புகழாரம் சூட்டியுள்ளார். 

Continues below advertisement

பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் அன்பே டயானா. இந்த படத்தில்  ரம்யா ரங்கநாதன், ரோஜா மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சென்னை பெரம்பூர் பகுதியைச் சுற்றி இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இப்படியான நிலையில் நடிகை ரோஜா நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் அன்பே டயானா படம் பெரம்பூர் சுற்றி கதைக்களத்தில் உருவாகியுள்ளது. அது முதலமைச்சர் விஜய் தொகுதி, அதைப்பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. 

விஜய் ரொம்ப அமைதியானவர்

அதற்கு பதிலளித்த ரோஜா, “எனக்கு விஜய் முதலமைச்சரானதில் உண்மையிலேயே அதிர்ச்சியாக தான் இருந்தது. நான் அவருடன் ஒரு பாடலில் மட்டும் தான் இணைந்து நடித்திருக்கிறேன். அந்த பாடல் ஷூட்டிங்கின்போது பார்த்திருக்கிறேன். ரொம்ப பேச மாட்டார். செட்டில் கூட ஒரு ஓரமாக சேர் போட்டு அமர்ந்துக் கொள்வார். காட்சி படமாக்கும்போது தான் மற்றவர்களுடன் பேசி கலகலப்பாக இருப்பார். இப்படி அமைதியாக இருப்பவர் எப்படி அரசியலில்  சாதிப்பார் என்ற கேள்வி எழுந்தது. ஒரு கட்சியை தொடங்குகிறார், நிறைய பேச வேண்டும், எல்லா விமர்சனங்களுக்கு நாம் பதிலடி கொடுக்க முடியாவிட்டாலும் மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்பதெல்லாம் உள்ளது. 

Continues below advertisement

விஜயின் முதல் அரசியல் பேச்சு பார்க்கும் வரை இதெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. நான் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, பவன் கல்யாண் என எல்லாரையும் பார்த்திருக்கிறோம். சினிமாவில் பேசுவது என்பது வேறு.  திரையில் இவர்களின் வசனங்களுக்கு அவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. கைதட்டி ரசிப்பார்கள். ஆனால் இவர்கள் 3 பேரும் மேடையில் ஏறி பேசினால் கேவலமாக இருக்கும். காரணம் அவர்களுக்கு மேடையில் பேச தெரியாது. இதில் ஜூனியர் என்.டி.ஆர். நன்றாக பேசுவார். ஒரு தேர்தலில் அவர் பரப்புரை மேற்கொண்டதைப் பார்த்ததால் சொல்கிறேன். 

Also Read: ஒரு வாரத்தில் ஜனநாயகன் ரிலீஸ்.. பண்டிகையை கொண்டாடுங்க.. வெளியான அறிவிப்பு!

மக்கள் வைத்த நம்பிக்கையால் விழுந்த ஓட்டு

இப்படியிருக்கும்போது தான் விஜயின் முதல் அரசியல் மேடை பேச்சைப் பார்க்கும்போது தான் எனக்கு புரிந்தது. அதாவது வெளியே இருக்கும் விஜய் அமைதியானவர். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் விஜய் ரொம்ப தெளிவானவர். என்ன செய்யப் போகிறார் என்பதை திட்டமிட்டுள்ளார். நல்ல எண்ணத்துடன் வந்தால் மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அது எப்படி என தெரியவில்லை. அதனால் தான் அலை அலையாக ஆர்வமுடன் வந்து வாக்களித்தார்கள். 

இந்த காலக்கட்டத்தில் திமுக, அதிமுக போன்ற பலமான கட்சிகள் இருக்கும்போது  அவர்கள் இல்லாமல் புதிதாக வந்த கட்சிக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயமாகும். பணம் எல்லாம் தேவையில்லை, விஜய்க்கு தான் ஓட்டு என முடிவெடுத்திருப்பது எவ்வளவு நம்பிக்கையான விஷயம். இதுவே மக்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். என்.டி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு சினிமாத்துறையில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். சிலரால் எம்.எல்.ஏ., எம்.பி., கூட ஆக முடியவில்லை.  ஆனால் விஜய் நேரடியாக முதலமைச்சரானது எல்லாம் பெரிய நிகழ்வாகும். விஜயை படிப்படியாக எல்லா காலக்கட்டங்களிலும் மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால் தான் ஒரு நம்பிக்கையுடன் ஓட்டுப் போட்டுள்ளார்கள் என நடிகை ரோஜா புகழ்ந்துள்ளார்.