வில்லனாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மறையாத அடையாளத்தை விட்டுச்சென்றவர் நடிகர் ரகுவரன். தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாள ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ரகுவரனை கெளரவிக்கும் பேட்டி ஒன்றில் ரகுவரன் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார் அவரது முன்னாள் மனைவி நடிகை ரோகிணி. இந்த பேட்டியில் தனுஷ் மற்றும் ரகுவரன் இடையிலான உறவு குறித்தும் அவர் பேசியுள்ளார்
நடிகர் ரகுவரன் பற்றி ரோகிணி
ரகுவரனுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசிய ரோகிணி "ரகுவரனின் ஆரம்ப காலத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர்களில் நானும் ஒருவர். கக்கா என்கிற மலையாள படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்தோம். அவர் நாயகனாகவும் நான் நாயகியாகவும் நடித்தோம். நான் சின்ன வயதில் இருந்தே நடித்து வந்தேன். ஆனால் அவருக்கு அதுதான் இரண்டாவது படம் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த படத்திலேயே அவரிடம் ஒரு முதிர்ச்சியான நடிகர் வெளிப்பட்டார். அந்த படத்திற்கு பின் அவரை பல வருடங்கள் கழித்துதான் சந்தித்தேன். ஆனால் அந்த இடைவெளியில் ஒரு நடிகராக அவர் தன்னை உருவாக்கி இருந்தார். ஒரு நடிகராக அவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகையாக நான் மாறினேன். நாங்கள் திருமணம் செய்துகொண்ட பின் அவர் நடித்த படங்களில் நான் அவர் நடிக்கும் விதத்தை மிக நெருக்கமாக இருந்து பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள் போகும்முன் அவர் நிறைய போராடினார். ரகுவரை திறமை கொண்டு வருவதற்கு 20 சதவீதம் மட்டும்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்றுதான் நான் சொல்வேன். " என்று கூறினார்
தனுஷ் ரகுவரன் உறவு
தனுஷ் மற்றும் ரகுவரன் இடையிலான உறவு பற்றி பேசும்போது " எங்களுக்கு விவாகரத்து ஆகியிருந்தது. ஆனாலும் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். காதல் கொண்டேன் படம் வெளியானபோது தனுஷைப் பார்த்து இந்த பையனுக்குள்ள என்னமோ இருக்கு என்று ரகுவரன் என்னிடம் சொன்னார். யாரடி நீ மோகினி படத்தில் நடித்தபோது தனுஷைப் பார்த்து தனுஷை என் பையன் மாதிரி உணர்கிறேன் என்று சொன்னார். 3 படத்தில் நடித்தபோதுதான் தனுஷூக்கும் ரகுவரனுக்கு இடையிலான உறவு பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. நடிகர்களாக ஒருத்தர் மேல் இன்னொருத்தருக்கு நிறைய மரியாதை இருந்தது" என ரோகிணி கூறினார்