பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து கோலிவுட்டின் முக்கிய இயக்குநராக உருவெடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பேசுபொருளாகி இருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’.


மாமன்னன்


உதயநிதி ஸ்டாலினின் திரைப் பயணத்தில் கடைசி படமாக இப்படம் அமைந்துள்ள நிலையில், நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மாமன்னன் படம், ஜூலை 28ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், திரையரங்குகளில் 52 கோடிகள் வரை வசூலித்ததாகத் தகவல்கள் வெளியானது.


தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் கடந்த சில நாள்களாக ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. மேலும் உலக அளவிலான டாப் 10 நெட்ஃப்ளிக்ஸ் படங்களிலும் இப்படம் இடம்பிடித்தது.


ஃபஹத் மீம்கள்


மற்றொருபுறம் இப்படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளைப் பெற்ற ஃபஹத் ஃபாசிலின் ரத்னவேல் கதாபாத்திரம் பற்றிய மீம்கள் இணையத்தில் படையெடுக்கத் தொடங்கின. ஒரு புறம் ஃபஹத் ரசிகர்கள் அவரை ரசித்து இந்த மீம்களை ட்ரெண்ட் செய்த நிலையில், பெரும்பாலும் சாதியரீதியிலான மீம்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.


ரத்தினவேலு கதாபாத்திரத்தை சாதியை பெருமைப்படுத்தும் விதமாக குறிப்பிடப்படும் பாடல்களுடன் இணைத்து பலரும் பதிவிட்ட நிலையில், மாரி செல்வராஜின் கருத்துக்கு நேர் எதிராக இணையத்தில் பல தரப்பினரும் மீம் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


 ரத்தினவேலு மனைவி


இதனிடையே விவரம் புரியாமல் முன்னதாக தன் ரத்னவேல் கதாபாத்திரத்தை ஃபேஸ்புக் கவர் புகைப்படமாக மாற்றிய ஃபஹத், சில மணி நேரங்களில் அந்தப் புகைப்படத்தை நீக்கினார். இந்த சர்சைகளுக்கு இடையே ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்த நடிகை ரவீனாவின் ஜோதி கதாபாத்திரமும் ரசிகர்களை ஈர்த்து தொடர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது.


பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் நடிகையுமான ரவீனா  ரவி இப்படத்தில் ஒரு வார்த்தை கூட பேசியிராத நிலையில், ஃபஹத் உடனான அவரது உணர்வுப்பூர்வமான காட்சிகள் ரசிகர்களை ஈர்த்தது. மேலும், ரவீனா- ஃபஹத் கதாபாத்திரங்களைக் கொண்டு பல காதல் பாடல்களையும் இணைத்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


ரவீனா ரவி ட்வீட்


இந்நிலையில் ஜோதி கதாபாத்திரத்துக்கு கிடைத்த அன்பு பற்றி நெகிழ்ந்து ரவீனா ரவி தற்போது பதிவிட்டுள்ளார்.


“இந்தப் பாத்திரத்துக்கு இவ்வளவு அன்பு வரும் என்று நான் என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை!  ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமாக இருக்கும். மாரி செல்வராஜூக்கு நன்றி, ஃபஹத் ஃபாசில் தான் ஷோ ஸ்டீலர்” என ரவீனா பதிவிட்டுள்ளார்.


 






ஃபஹத் ஃபாசிலின் கண்களுக்கென ஏற்கெனவே தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில்,  தற்போது ரவீனாவின் கண்களும் ரசிகர்களை ஈர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறது.