ஏஐ தொழில்நுட்பத்தை சரியான விஷயத்திற்கு பயன்படுத்துவோம் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ள நிலையில், வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பண மோசடி, தனி நபர்களை மார்ஃபிங் செய்து ஆபாசமாக சித்தரித்தல் என பலவிதமான குற்றங்களிலும் தொடர்ச்சியாக சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க எவ்வளவு நடவடிக்கைகள், கடுமையான தண்டனைகள் ஆகியவை இருந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
ஏஐ தொழில்நுட்பம்
குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு அதில் நடைபெறும் பல விரும்பத்தகாத சம்பவங்கள் பெண்களை மிகப்பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதில் பிரபலங்கள் தொடங்கி சாதாரண பெண்கள் வரை யாரும் தப்பவில்லை. இது மிகப்பெரிய கவலையெழுப்பும் விஷயமாக மாறியுள்ளது. ஏஐ தொழில் நுட்பம் எது, உண்மை எது என தெரியாத அளவுக்கு அதன் வளர்ச்சி இருப்பதால் மக்கள் குழம்பி விடுகின்றனர். அப்படியான ஏஐ தொழில்நுட்பத்தால் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ச்சியாக பாதிப்புகளை சந்தித்து அதன் கவலைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா கோரிக்கை
அப்படியாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “"உண்மையை உருவாக்க முடிந்தால், பகுத்தறிவு நமது மிகப்பெரிய பாதுகாப்பாக மாறும். AI என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாகும், ஆனால் அதை தவறாகப் பயன்படுத்துவதும் பெண்களை குறிவைப்பதும் சிலரிடம் ஆழமான தார்மீக வீழ்ச்சியைக் குறிக்கிறது. இணையம் இனி உண்மையின் கண்ணாடி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது எதையும் புனையக்கூடிய ஒரு கேன்வாஸ்.
தவறான பயன்பாட்டிற்கு அப்பால் உயர்ந்து, மிகவும் கண்ணியமான மற்றும் முற்போக்கான சமூகத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவோம். பொறுப்பற்ற தன்மையை விட பொறுப்பைத் தேர்வுசெய்க. மக்கள் மனிதர்களைப் போல செயல்பட முடியாவிட்டால், அவர்களுக்கு கடுமையான மற்றும் மன்னிக்க முடியாத தண்டனை வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு டீப் ஃபேக் மூலம் தன்னை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியானபோது ராஷ்மிகா மந்தனா மிகப்பெரிய அளவில் வருத்தப்பட்டார். தற்போதைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் மிக தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனது பள்ளி, கல்லூரி காலத்தில் இந்த மாதிரி வீடியோ வெளியாகியிருந்தால் அதை எப்படி எதிர்கொண்டு இருப்பேன் என தெரியவில்லை. நம்மில் பலர் பாதிப்படைவதற்கு முன் அதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். அதேசமயம் மத்திய அரசும் டீப் ஃபேக், ஏஐ மூலம் வெளியாகும் தனிப்பட்ட நபரின் கண்ணியத்தை பாதிக்கக்கூடிய வீடியோக்களை நீக்கி அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.