இன்ஸ்டாகிராமில் நடிகை ரம்யா குறித்து ஆபாசமாக கருத்து பதிவிட்ட நபர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா எம்.பி.யாக பதவி வகித்திருந்தார். சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் அவர் சமீபத்தில் கன்னடத்தில் வெளியான சார்லி -777 என்ற படத்தைப் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 6 ஆம் தேதி அந்த படம் நன்றாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை அவரது ரசிகர்கள் உட்பட பலரும் வரவேற்ற நிலையில் ப்ரீத்தம்.பிரின்ஸ்.கே என்ற இன்ஸ்டாகிராம் பெயர் கொண்ட நபர் ஒருவர் ரம்யா பற்றி ஆபாசமாக கருத்து வெளியிட்டிருந்தார். இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தன்னைப் பற்றி ஆபாசமாக கருத்து தெரிவித்த அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர் முடிவு செய்தார்.
அதன்படி பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய அவர், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார். பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் உள்ள மத்திய மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற ரம்யா இன்ஸ்டாகிராம் நபர் மீது புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்கு தொடர்பான தகவல்களை சேகரித்ததோடு மட்டுமல்லாமல் அந்த நபரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சமீபகாலமாக பிரபலங்கள் மீது ஆபாச கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது சகஜமாகி வருகிறது. இதேபோல் அஜித் நடித்த வலிமை படம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ் சின்னத்திரை நடிகை ஒருவரை ஆத்திரத்தில் அஜித் ரசிகர்கள் சரமாரியாக வசைபாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்