Ramya Krishnan Birthday: படையப்பாவின் நீலாம்பரியாகவும், ராஜமாதா சிவகாமி தேவியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் என்றுமே நீங்காத இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 


சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், 1983ம் ஆண்டு வெளிவந்த ‘வெள்ளை மனசு’  படத்தில் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரைத்துரையில் அறிமுகமானார். முதல் படம் பெரிதாக பேசப்படாததால்,  85ல் வெளிவந்த ரஜினிகாந்தின் படிக்காதவன், 87ல் வெளிவந்த கமல்ஹாசனின் பேர் சொல்லும் பிள்ளை படங்களில் துணை நடிகையாக நடித்தார். அடுத்ததாக மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம் படத்தில் பாண்டியனுக்கு ஜோடியாக நடித்தார். எனினும், ரம்யா கிருஷ்ணனின் கேரக்டர்கள் பெரிதாக பேசப்படாததால் நடிகை, துணை நடிகை என மாறி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 


80களில் சாதாரண துணை நடிகையாக இருந்த ரம்யா கிருஷ்ணன் 90களில் கவனம் ஈர்க்க தொடங்கினார். 1991ல் பாலச்சந்தர் தயாரிப்பில் வெளிவந்த சிகரம் படத்தில் நவீன சிந்தனைகளை பேசும் பெண்ணாக, துணிச்சலாக நடித்து அசத்தினார். இதனால் ரம்யா கிருஷ்ணன் மீது ரசிகர்கள் பார்வை விழுந்தது. அடுத்ததாக பாலசந்தர் தயாரித்த வானமே எல்லை படத்தில் நடித்தவருக்கு ஜாக்பாட் அடித்தது விஜயகாந்த் நடிப்பில் வந்த கேப்டன் பிரபாகரன் படம் தான். இதில் சரத்குமாரின் காதலியாக வந்து வில்லனை பழிவாங்கும் கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருப்பார். படத்தில் இடம்பெற்றிருந்த ஆட்டமா தேரோட்டமா பாடலும், ரம்யா கிருஷ்ணனின் நடனமும் எவர்கிரீன் பாடலாக மாறியது. 


இடைப்பட்ட காலத்தில் கன்னடம், தெலுங்கு, இந்தி என பிசியான ரம்யாகிருஷணன், 1999 -ல் மீண்டும் தமிழுக்கு திரும்பினார். ரீ எண்ட்ரியில் அவர் நடித்த நீலாம்பரி கேரக்டருக்கு இன்றும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். படையப்பா படத்தில் ரஜினியை எதிர்க்கும் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், கேரக்டருக்கு ஏற்ற ஆணவம், கோபம் என ஓவ்வொரு காட்சியிலும் அசத்தி இருப்பார். ரஜினி, ரம்யாகிருஷ்ணனின் அந்த காம்பினேஷனுக்காகவே படையப்பா படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தவர்கள் பலர் உள்ளனர். 


தொடர்ந்து சரத்குமாருடன் இணைந்து பாட்டாளி, பிரபுவுடன் பட்ஜெட் பத்மநாபன், சத்யராஜூடன் அசத்தல் படங்களில் நடித்த இவர், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த பஞ்ச தந்திரம் படம் மீண்டும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணனுக்கும், சிம்ரனுக்கும் இருக்கும் போட்டி நடனம் ரசிகர்களை ரசிக்க வைத்தது. தொடர்ந்து பாலுமகேந்திராவின் ஜூலி கணபதி படத்தில் நடித்திருந்தார். படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து மட்டும் இல்லாமல் ரிதம் படத்தில் ஐயோ பத்திக்கிச்சு, காக்க காக்க படத்தில் தூது வருமா, குத்து படத்தில் போட்டுத்தாக்கு உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடி அசத்தி இருப்பார். 


அம்மன் உள்ளிட்ட பக்தி படங்களில் சாமியாகவும் நடித்தி தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அம்மனின் கோபத்தை கண்களில் காட்டிய ரம்யாகிருஷ்ணனை பார்த்தால் நமக்கே பயம் வரும் என்ற அளவுக்கு மிரட்டி இருப்பார். 2003ம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்த இவர் சில நாட்கள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர், 2006ம் ஆண்டு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்றிருந்தார்.


இப்படி அனைத்து கேரக்டர்களிலும் வலம் வந்த ரம்யாகிருஷ்ணனுக்கு வாழ்நாள் புகழை தரும் படமாக 2015ம் ஆண்டு வெளிவந்த பாகுபலி அமைந்தது. அன்பும், வீரமும், விவேகமும், கம்பீரமும் நிறைந்த ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தார். பாகுபலி2 படத்தில் வலுவான  மற்றும் சவாலான கேரக்டரில் நடித்த ரம்யாகிஷ்ணன் நடிப்பின் உச்சத்தை திரையில் காட்டி இருந்தார். 


அண்மையில் திரைக்கு வந்து ஓடி கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சாதுவான ஒரு மனைவியாக ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தார். படையப்பாவில் நீலாம்பரி சொன்ன அடுத்த ஜென்மத்தின் சபதம் ஜெயிலரில் நிறைவேறியதாக ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். மீண்டும் திரையில் கம்பேக் கொடுத்த ரஜினி, ரம்யாகிருஷ்ணன் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.






நாயகி, துணை நடிகை, பாடலுக்கு நடனம், கௌரவ தோற்றம், வில்லத்தனம், கம்பீரம் என தனக்கான ஒவ்வொரு கேரக்டருக்கும் உயிர் கொடுத்து திரையில் ரசிகர்களை ரசிக்க வைத்த ராஜமாதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.