90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா, இந்திரன் என்ற இலங்கை தமிழ் தொழிலதிபரை மணந்து கொண்டு, கனடாவில் வசித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து தன் குழந்தைகளை அழைத்து வரும் போது, அவரது கார் மீது மற்றொரு கார் மோதியது. 


இதில் ரம்பா உள்ளிட்ட அவரது மூன்று குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோர் காயம் அடைந்தனர் .குறிப்பாக, கார் கதவு அருகே அமர்ந்திருந்த ரம்பாவின் இளைய மகள் சாஷாவிற்கு படுகாயம் ஏற்பட்டு, ஐசியூ.,பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தமிழ் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ரம்பாவுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வந்த ரம்பா, தன் குடும்பத்தார் மற்றும் மகளின் உடல்நிலை குறித்து விளக்கினார். இதோ அவரது பேச்சு...






 


‛‛என்னுடைய அனைத்து ரசிர்களே, என்னுடைய அனைத்து நண்பர்களே... என்னுடைய அனைத்து குடும்ப உறவினர்களே... நீங்கள் அனைவரும் எங்களுக்காக பிராத்தனை செய்தீர்கள். உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் எங்கள் பாதுகாப்பிற்காக வேண்டினீர்கள். உங்கள் அனைவருக்கும் என் அடி உள்ளத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  என் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அதற்கு உங்களின் பிரார்த்தனை தான் காரணம். தொடர்ந்து எங்களுக்கு உங்கள் அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த இப்போது என்னிடம் எந்த வார்த்தைகளும் இல்லை. 


உங்களால் தான் நாங்கள் நலமாக இருக்கிறோம்; குறிப்பாக என் இளைய மகள் சாஷா இப்போது நலமாக இருக்கிறாள். அவள் மீண்டும் நலமுடன் வீடு திரும்புவாள். உங்கள் அனைவருக்கும் என் அன்பும், என் முத்தங்களும். நான் முதன் முதலாக நேரலையில் வந்து பேசுகிறேன். என் மீது அன்பு கொண்ட உங்கள் அனைவருக்கும் மிக மிக நன்றி. எல்லா மொழிகள் பேசும் என் ரசிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 






எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் ரொம்ப கொடுத்து வைத்தவள். எனக்காக நீங்கள் அனைவரும் ப்ரே பண்றீங்க..! ஸ்ரீ லங்காவில் இருந்து பலர் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். நான் ஸ்ரீலங்கா வீட்டு மருமகள்; நான் உங்களோடு தான் இருக்கிறேன்; வேறு எங்கேயும் போக மாட்டேன். நீங்கள் எல்லாரும் கடவுளை வணங்கியதால் தான் நாங்கள் நலமுடன் இருக்கிறேன். எனக்கு இது முதல் முறை. எனக்கு ஒரு கவலை என்னவென்றால், நான் தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது இது நடந்ததும், எனக்கு பெரிய கவலையை கொடுத்துவிட்டது. 


நான் 7 மொழிகளில் நடத்திருக்கிறேன். இதனால் 7 மொழிகளை கற்றிருக்கிறேன். என் சின்ன பையன் என்னை அழைக்கிறான், எனவே நான் இப்போது இந்த நேரலையை முடித்து அவனிடம் செல்கிறேன். விபத்து நடந்து 24 மணி நேரத்தில் சில சோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. நான் இப்போது புறப்படுகிறேன்; இன்னொரு நாளில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிச் செல்லுங்கள். குழந்தைகளுடன் செல்லும் போது இன்னும் பாதுகாப்பாக செல்லுங்கள்,’’


என்று அந்த வீடியோவில் ரம்பா பேசியுள்ளார்.