இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோக அலைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பாரதிராஜாவுக்கு முக்கியமானவர்கள் சிலர் அவரது மறைவால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகை ராதிகா ஒரே ஆண்டில் தனது தாய் மற்றும் தனது குருநாதரை இழந்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வேதனை பகிர்ந்துள்ளார்

Continues below advertisement

பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா. நடிப்பு மீது பெரியளவில் ஆர்வம் இல்லாத ராதிகாவை ஒரு தேர்ந்த நடிகையாக உருவாக்கியவர் பாரதிராஜா என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நிறம் மாறாத பூக்கள் , கிழக்குச் சீமையிலே , பசும்பொன் என இந்த கூட்டணியில் வெளியான படங்கள் ராதிகாவிற்கு சிறந்த நடிகை என்கிற பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தன. சமீபத்தில் ராதிகா நடித்த தாய் கிழவி திரைப்படத்தை  சிகிச்சை இருந்தபோது பாரதிராஜா பார்த்து இந்த படத்திற்காக நிச்சயம் உனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பாராட்டியிருந்தார். 

ஒரே ஆண்டில் இரண்டு பேரை இழந்துவிட்டேன்

நடிகை ராதிகாவின் தாயார் கீதா ராதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். தனது தந்தையின் மறைவுக்குப் பின் தனது அம்மாதான் தன்னை சினிமாவில் நடிக்க ஊக்கப்படுத்தியவர் என்றும் எத்தனை விமர்சனங்கள் வந்தபோதிலும் தனக்கு ஆதரவாக நின்றவர் என்று ராதிகா பல சமயங்களில் கூறியுள்ளார்.தனது தாயாரின் இறப்பைத் தொடர்ந்து தான் அதிகம் நேசித்த தனது குருநாதர் பாரதிராஜாவின் இறப்பு அவரை பெரிதும் பாதித்துள்ளது. இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்; மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்கள். இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன். இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது. என் வலியை உணர்ந்து, என்னுடன் நின்று, அன்பும் ஆதரவும் அளித்த ஒவ்வொருவருக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் நினைவுகளும், அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும் என்னுடன் என்றும் பயணிக்கும்.” என அவர் பதிவிட்டுள்ளார் 

Continues below advertisement