பாக்யராஜ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகை ராதிகா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் ஊடகவியலாளர்கள் தொந்தரவு கொடுத்ததால் பாக்யராஜ் உடலுக்கு நிம்மதியாக இறுதி அஞ்சலி செலுத்த முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் கடந்த ஜூன் 27 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.  தமிழ் சினிமாவில் திரைக்கதை ஜாம்பான் என்றழைக்கப்பட்ட பாக்யராஜ் திடீரென்று உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அசென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் திரைத்துறை மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பாக்யராஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தனர். அதிகப்படியான  ஊடகவியலாளர்கள் வந்ததால் அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது. குறிப்பாக  ஊடகவியலாளர்கள் செயலால் கடுப்பான நடிகை ராதிகா அவர்களுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டார் . இதுகுறித்து அவர் தற்போது தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் தள்ளுமுள்ளு - ராதிகா அறிக்கை

நடிகை ராதிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் "50 ஆண்டுகால நட்போடு பயணித்த நண்பருக்கு ஒரு பிரியாவிடை கொடுத்திருக்கிறோம். ஒரு சிறந்த படைப்பாளி, சிந்திக்க வைத்த எழுத்தாளர், கலையுலக நிகழ்வாக இருந்தாலும் சரி, குடும்ப நிகழ்வாக இருந்தாலும் சரி அவரோடு குடும்பசகிதமாக பழகிய நாட்களை நினைவுகூறுகிறோம்.

Continues below advertisement

அவரது இந்த தீடீர் பிரிவு குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையில் இருக்கின்ற சக கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் பேரதிர்ச்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களுடன் திருமதி.குஷ்பு அவர்களின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நிலையில், திடீரென மறைந்தார், இன்று அவர் நம்மோடு இல்லை என்ற எதிர்பாராத அதிர்ச்சி செய்தி எங்கள் மனதை எப்படி ஆழமான துக்கத்தில் மூழ்கடிக்கச் செய்திருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

அவரை இழந்து தவிக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மனவேதனையோடு இறுதி மரியாதை செலுத்துகின்ற இடம் ஒரு அமைதி இல்லாமல், நிம்மதி இல்லாமல் மனதார அந்த ஆத்மாவிற்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் நடந்த சில நிகழ்வுகள் மனதிற்கு மிகுந்த வேதனையாக இருந்தது.

சமூக வலைதள தாக்கம், உடனுக்குடன் செய்திகளை தந்து யார் முதலிடம் பிடிக்கிறார்கள், அழுகையை எந்த அளவிற்கு zoom செய்து காட்டி ஏற்ற வாசகம் போட்டு அதிக பார்வையாளர்களை கவர்கிறார்கள் என்று போட்டி போடுவதால், மனிதர்களின் யதார்த்தமான உணர்வுகளை மதிக்க இயலாமல், புரிதல் இல்லாத சமூகமாக இச்சமூகம் தள்ளப்படுகிறதோ என்ற ஐயத்துடன் யோசிக்க தோன்றுகிறது. வருங்காலத்தில் இதே நிலை தொடர்வது தமிழர்களின் மானுட வாழ்வியல், பாரம்பரிய, கலாச்சாரத்திற்கு நல்லதல்ல. சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் ஒருபுறம் இருந்தாலும், அங்கு நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள் சமூகத்தில் இனி நடைபெறாமல் தடுத்திடல் வேண்டும்.

அரசும், திரைலகமும் இணைந்து, துக்கம் கண்ணியமும், மரியாதையும் காக்கும் அனுசரிக்கும் இடங்களில் வழிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்த அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என ராதிகா கூறியுள்ளார்.