சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தான் திரைத்துறை நடிக்க வந்ததில் இருந்து சந்தித்த அவவானங்கள் குறித்து ராதிகா பேசினார். தனது தந்தையின் பெயரை கூட போட விடாமல் தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு இன்று தான் பெருமையாக எம்.ஆர் ராதாவின் மகள் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன் என்று ராதிகா பேசினார். 

Continues below advertisement

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. தாய்கிழவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராதிகா இப்படி கூறினார் ,

கமல் தான் இன்ஸ்பிரேஷன் 

கமல் சார் படம் பார்த்தபோது நானும் உட்கார்ந்து முழு படத்தையும் பார்த்தேன். இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம். அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார் அதனால் என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த தாய்கிழவியை அவ்வளவு மாஸாக காட்டியிருக்கிறார்கள். இந்த படத்திற்கு மேக் அப் போட அவ்வளவு நேரமாகும். அப்போது எல்லாம் கமலை தான் நினைத்துக் கொள்வேன். ஒரு படத்திற்கு இவ்வளவு கஷ்டம் என்றால் கமல் எத்தனை படங்களில் எத்தனை கெட் அப்களில் நடித்துள்ளார். இந்த கதையில் நான் நடிக்க அவர் தான் என்னை இன்ஸ்பையர் செய்தார்.  ராதிகா நீங்க தெரியக்கூடாது அந்த கதாபாத்திரம் தான் தெரியனும் என்று கமல் என்றோ ஒரு நாள் என்னிடம் சொன்ன வார்த்தை . அந்த வார்த்தை எனக்குள் ஒட்டிக்கொண்டது. 

Continues below advertisement

சினிமாவில் சந்தித்த அவமானங்கள் 

இங்கு நான் நிறைய பேரின் பெயர்களை குறிப்பிட வேண்டாம் என்று என் கணவர் என்னிடம் சொல்லிவிட்டு போய்விட்டார்.  நான் பாரதிராஜா இயக்கத்தில் முதல் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த பொண்ணு இந்த ஒரு படத்தோட சரி அடுத்த படத்திற்கு தாங்காது என்று சொன்னார். ஆனால் அந்த தயாரிப்பு நிறுவனத்தில் அதிக படங்களில் நடித்த நடிகை நான் தான். என் வாழ்க்கையில் நான் பார்க்காத சந்திக்காத அவமானங்கள் இல்லை. எனக்கு கிடைக்க வேண்டிய எத்தனையோ வாய்ப்புகள் கிடைக்காமல் போயிருக்கின்றன. ஆனால் நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்னுடைய நம்பிக்கை என்னை இந்த இடத்தில் நிறுத்தி இருக்கிறது. இந்த தருணத்தில் என்னுடைய குரு பாரதிராஜா இந்த படத்தை பார்க்க முடியாதது எனக்கு பெரிய வருத்தம். இந்த படத்தை பார்த்த கமல் பாரதிராஜாவுக்கு படத்தை காட்டு அவர் எழுந்துகொள்வார் என்று சொன்னார். 

எம் ஆர் ராதா பொண்ணு என்பதை நிரூபிக்கிறேன்

தாய்கிழவி திரைப்படம் என் தந்தை நடிகவேள் எம்.ஆர் ராதாவுக்கு நான் செலுத்தும் புகழாரம். இப்படத்தில் நான் லேடி எம்.ஆர் ராதாவாக தான் நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்கு வந்த என் தந்தையின் பெயரை கூட சொல்ல விடாமல் என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றும் இருக்கிறார்கள். அதனாலேயே என் அம்மாவிடம் என் அப்பா பெயரை போட வேண்டாம் என்று சொன்னேன்.  இன்று நான் பெருமையோடு தெனாவட்டோடு சொல்கிறேன் நான் எம்.ஆர் ராதாவின் பொண்ணு என்பதை நான் நிரூபிக்கிறேன். நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய குடும்பத்திற்கு என்னுடைய உடன்பிறந்தவர்களுக்கு நான் இதை நிரூபித்துக் கொள்கிறேன். " என்று ராதிகா பேசினார்.