டிமாண்டி காலணி 3
ஹாரர் ஜானரில் வெளியான படங்களில் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது டிமாண்டி காலணி பட வரிசை. கடந்த ஆண்டு வெளியான டிமாண்டி காலணி 2 திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது மேலும் பெரிய பட்ஜெட்டில் டிமாண்டி காலணி 3 ஆம் பாகம் தயாராக இருக்கிறது. அருள் நிதி , பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
35 கோடி பட்ஜெட்
2015-ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி. தமிழில் வெளியான வித்தியாசமான ஹாரர் படங்களில் ஒன்று. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அறிவிப்பு வெளியாகி பின் நீண்ட நாட்கள் ரிலீஸ் காத்திருப்பில் இருந்தது. இதனிடையில் இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கினார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து இயக்குநர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு வெளியான டிமாண்டி காலணி 2 திரைப்படம் உலகளவில் ரூ 85 கோடி வசூலித்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிமாண்டி 3 ஆம் பாகத்திற்கான பணிகளை தொடங்கினார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. முந்தைய இரு பாகங்களைக் காட்டிலும் டிமாண்டி காலனியின் மூன்றாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் சுமார் ரூ 35 கோடியில் உருவாக இருப்பதாகவும் ஜப்பானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்க்கிங் படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் மும்மையைச் சேர்ந்த கோல்டுமைன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பிரியா பவானி சங்கருக்கும் இந்த படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. இப்படத்தில் அவர் நடித்த டெபி கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது 3 ஆம் பாகத்திலும் டெபி கதாபாத்திரத்தில் தொடர்கிறார் பிரியா பவானி சங்கர்