வாய்தா படத்தில் நடித்த நடிகை பவுலின் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மல்லிகை அவென்யூ பகுதியைச் சேர்ந்த பவுலின் என்கிற தீபா, அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தனியாக வசித்து வரும் அவர் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார். துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக நடித்த பவுலின் , இயக்குநர் மகிவர்மன் எடுத்த நாசர், புகழ் மகேந்திரன் நடித்த வாய்தா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். 






இந்த நிலையில் நேற்று மதியம் அவருக்கு உறவினர்கள் போன் செய்து பார்த்துள்ளனர். பவுலின் போனை எடுக்காத நிலையில் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து தெரிய வந்தது. இதனையடுத்து ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் பவுலின் சகோதரர் தினேஷ் என்பவருக்கு பிரபாகரன் தகவல் தெரிவித்தார். சென்னைக்கு விரைந்து வந்த அவர் இதுதொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையிலும், திரைக்கு பின்னாலும் தற்கொலை தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரபலங்களே கடைசியில் அத்தகைய முடிவை தேடிக் கொள்வது வேதனைக்குள்ளான ஒன்றாக உள்ளது. சமீபத்தில் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திரையுலகினர் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சோக சம்பவம் மறைவதற்குள் சென்னையில் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050