கணவர் பாக்யராஜை தான் சந்தித்த தருணத்தை நேர்காணல் ஒன்றில் நடிகை பூர்ணிமா தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் ஹீரோயின்களில் ஒருவர் பூர்ணிமா பாக்யராஜ். படங்களில் நடிக்க தொடங்கி சில வருடங்களிலேயே இயக்குநரும்,நடிகருமான பாக்யராஜை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு சாந்தனு, சரண்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே பூர்ணிமா வார இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கணவர் பாக்யராஜை தான் சந்தித்த முதல் தருணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 


அதில், “மலையாளத்தில் பாசில் இயக்குநராக அறிமுகமான “மஞ்சில் விரிஞ்ச பூக்கள்” படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போ நான் கல்லூரியில் இறுதியாண்டு படிச்சிட்டு இருந்தேன். வாய்ப்பு வந்ததும் கே.பாலசந்தர் சார் கிட்ட போய் சொன்னேன். அவர் என்னை வாழ்த்தி தாராளமா போய் நடிம்மா என தெரிவித்தார். அந்த படத்தோட ஷூட்டிங் 25 நாட்கள் கொடைக்கானலில் நடந்தது. அந்த படம் சூப்பர் ஹிட்டானது. மஞ்சில் விரிந்த பூக்கள் ஷூட்டிங்கில் தான் ஒளிப்பதிவாளர் அசோக் குமார் “பாக்யராஜ்” பெயரை முதன் முதலாக சொல்லி நான் கேள்விப்பட்டேன். 


ஒரு நிகழ்ச்சியின் அருகில் அமர்ந்திருந்த நடிகை அம்பிகாவும், அவரின் பெயரை சொல்லி, அடுத்தப்படம் நடிக்கிறேன் என கூறினார். இதனால் ஆள் யாரென்று தெரியாத நிலையிலும் எனக்கு பாக்யராஜ் மீது மதிப்பு கூடியது. அம்பிகா சொன்ன அந்த படம் தான் “அந்த 7 நாட்கள்”. அப்படம் எனக்கு ரொம்ப பிடிச்சி போக யாரு அந்த ஆளு, இப்படி பொண்ணுங்க மனதின் ஆழம் வரை ஊடுருவி சென்ற மாதிரி ரொமான்ஸ், செண்டிமெண்ட் என கலக்குறாரேன்னு நினைச்சேன். படத்தில் நடிப்பு, இயக்கம் என பாக்யராஜ் பெயரை போட்டிருந்ததும் போய்  வாழ்த்தணும்ன்னு நினைச்சேன்.


இதற்கிடையில் நடிகை சரிதா நடித்த அம்மா படத்தின் பிரிவ்யூ ஷோவுக்கு சென்றிருந்தபோது பாக்யராஜ் வந்திருப்பதாக சொன்னார்கள். ஓடிப்போய் அவரிடம், ‘படம் ரொம்ப நல்லாருக்கு. நான் என்ஜாய் பண்ணி பார்த்தேன்’ என சொன்னேன். ஆனால் பாக்யராஜ் ஒன்றுமே சொல்லாமல் சென்று விட்டார். எனக்கோ, “நாம ஒரு ஹீரோயின். முதல்முறையா சந்திச்சு பேசுறேன். ஓடி வந்து பாராட்டுறோம். ஒரு வார்த்தை கூட பேசலையே” என டென்ஷனாக இருந்தது. 


அதன்பிறகு நானும் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை படங்கள் வெளியாகி ரொம்ப பிஸியாக இருந்த போது எனக்கு பாக்யராஜ் எடுத்த டார்லிங் டார்லிங் டார்லிங் பட வாய்ப்பு வந்தது. முதல் சந்திப்பே அதிருப்தியை ஏற்படுத்தியதால் ரொம்ப யோசித்தேன். ஆனால் என்னுடன் இருந்தவர்கள், ‘பாக்யராஜ் பெரிய டைரக்டர். வாய்ப்பை மிஸ் பண்ணிராத’ என சொன்னார்கள். சரி என முடிவு செய்து அவரை போய் பார்த்தேன். கதையெல்லாம் சொல்லி ரொம்ப எளிமையாக பேசினார். உடனே நான் அன்னைக்கு என்கிட்ட ஏன் பேசவில்லை என மனதில் இருந்த கேள்வியை கேட்டு விட்டேன். 


அதற்கு பாக்யராஜோ, “நீங்க அன்னைக்கு இங்கிலீஸ்ல பேசுனீங்க. எனக்கு புரிஞ்சாதானே பதில் சொல்ல முடியும். புரியவில்லைன்னு சொன்னா, இவ்வளவு பெரிய இயக்குநருக்கு இங்கிலீஸ் தெரியலையான்னு நினைச்சிருவீங்க. அதான் மரியாதையை காப்பாத்திக்க அமைதியா போயிட்டேன்” என சொன்னார். அதைக்கேட்டு எனக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை” என அந்த நேர்காணலில் பூர்ணிமா தெரிவித்துள்ளார்.