சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் 'சந்தீப் அவுர் பிங்கி ஃபாரார்'. இந்தத் திரைப்படத்தில் நடிகை பரினீதி சோப்ரா கதநாயாகியாக நடித்துள்ளார். மேலும் இந்தாண்டு சாய்னா, த கேர்ள் ஆன் த ட்ரெயின் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சந்தீப் அவுர் பிங்கி ஃபாரார் படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். 


இந்நிலையில் இந்தப் படம்  தொடர்பாகவும் சமூகம் தொடர்பாக ஒரு செய்தி தளத்திற்கு பரினீதி சோப்ரா பேட்டியளித்துள்ளார். அதில், "ஆண் ஆதிக்க சமூகத்தை நாம் ஏற்று கொள்ள தொடங்கியதால் அது குறித்து நாம் சிந்திப்பதை நிறுத்தி விட்டோம். ஆனால் பெண்கள் தினமும் இந்த ஆண் ஆதிக்கத்தை சந்தித்து வருகின்றனர். என்னுடைய வீட்டை புதிதாக மாற்றி அமைக்கும் போது நான் இந்த பிரச்னையை சந்தித்தேன். அப்போது வேலை செய்ய வந்தவர்கள் நான் பெண் என்பதால் என்னிடம் சரியாக பேசமாட்டார்கள். அத்துடன் என் வீட்டில் ஆண்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள்.


அவர்களிடம் இந்த வீட்டை வாங்கி, அதை புதுப்பித்திருப்பது நான்தான் என்று கூறினேன். அப்போதும் அவர்கள் என்னிடத்தில் சரியாக பேசவில்லை. இந்தத் திரைப்படத்தில் அது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன" எனக் கூறியுள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் அவருக்கு பிடித்த காட்சி என்னவென்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கும் அவர் பதிலளித்துள்ளார். அதில், "இத்திரைப்படத்தில் ஆண்கள் அனைவரும் அமர்ந்திருக்கும்போது பெண் ஒருவர் மட்டும் நின்று கொண்டிருப்பார். அவர் படத்தில் ஒரு ஊறுகாயை கூட எடுத்து தருமாறு ஆண்களிடம் கேட்கமாட்டாள். அந்தக் காட்சியில் நடிக்கும் போது எனக்கு என்னுடைய கிராமம் தன் ஞாபகத்திற்கு வந்தது. நான் சிறுவயதில் கிராமத்தில் இருந்தபோது எங்கள் ஊரில் ஆண்கள் சாப்பிட்டு தூங்கும் வரை பெண்கள் சாப்பிடக்கூடாது. அத்துடன் ஆண்களுடம் சரிசமமாக அமர்ந்து பெண்கள் உணவு உண்ண முடியாது.


இது எங்களுடைய வீட்டிலேயேயும் நடந்துள்ளது. என்னுடைய தாய் என் தந்தை சாப்பிடுவதற்கு முன்பாக சாப்பிட மாட்டார். இதற்கு காரணம் என்னுடயை தந்தை அல்ல. ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட இந்த ஆண் ஆதிக்க சமூக விதிகள் தான். ஆகவே இந்த ஆண் ஆதிக்க சமூகத்தை நாம் உடைக்க வேண்டும். எனவே இந்தப் படத்தில் இந்தியாவில் எப்படி ஆண் ஆதிக்க சமூகம் ஏற்று கொள்ளப்பட்டு வருகிறது. அதை நாம் எப்படி மாற்ற வேண்டும் என்பதே கூறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.  பல இடங்களில் பெண்கள் சந்திக்கும் ஆண் ஆதிக்க சமூக பிரச்னைகளை முன்வைத்துள்ளதாக கூறுகிறார். 


மேலும் படிக்க: ''மேக்கப் போட்டா நயன்தாரா மாதிரி இருக்கேனாம்.. அவங்க பயோபிக்ல நடிக்கணும்' - அனிகா சுரேந்திரன்