திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நித்யா மேனன் இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக இருப்பதாகவும், நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி பார்த்த அனுபவம் ஏற்பட்டதாகவும் ரசிகர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் திரையிட்ட இடங்களில் எல்லாம் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. படம் வெளியாகி 5 நாட்கள் முடிந்துள்ள நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலக அளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 43.74 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் நடிகை நித்யா மேனன் இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் அவரை தாய் கிழவி என அழைத்தனர். ஆனால் படத்தில் வரும் அந்த பெயர் தனக்கு பிடிக்காது என்றும், அப்படி கூப்பிடாதீங்க என தெரிவித்தார். மேலும் தனுஷோடு மீண்டும் நடிக்க தயார் என்றும், அவரும் எப்போது கூப்பிட்டாலும் வந்து நடித்து கொடுக்க வேண்டும் என தெரிவித்ததாக நித்யா மேனன் தெரிவித்தார்.
மேலும் நான் இனிமேல் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன் என்றும், படத்தில் என்னை பார்க்கும் போது உங்கள் தோழி, மனைவி மாதிரி இருப்பதாக கூறுகிறீர்கள். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லா இடத்திலும் நான் இருக்கேன் என நினைத்துக் கொள்கிறேன் என நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.