எனக்கு விவகாரத்தான சமயத்தில் என் கேரக்டரை தரக்குறைவாக பேசியதால் மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளானதாக நடிகை நிஹாரிகா கொனிடேலா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் சிரஞ்சீவியின் தம்பியான நாகபாபு சினிமாவில் நடிகராக திகழ்கிறார். இவரது மகளான நிஹாரிகா சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.
குறும்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பரீட்சையமான நிஹாரிகா சினிமாவில் தனது முதல் படத்திலேயே பார்வையாளர்களை கவர்ந்தார். தொடர்ச்சியாக அவர் படம் நடித்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதேசமயம் தயாரிப்பாளராகவும் அவர் களம் கண்டார். இந்த நிலையில் தான் 2020ம் ஆண்டு குண்டூர் மாவட்டத்தின் ஐஜி மகனான சைதன்யாவுடன் நிஹாரிகாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் மிகப்பெரும் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஆனால் 2023ம் ஆண்டு இந்த தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் பிரிந்து செல்வது பற்றி ஆலோசித்து முடிவெடுத்தனர். நிஹாரிகாவின் விவாகரத்து பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில் அதைப் பற்றி பெரிதும் கவனத்தில் கொள்ளாத அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசினார்.
அதில், “ எங்களுடையது நிச்சயிக்கப்பட்ட திருமணம். எனக்கு விவாகரத்து கிடைத்தபோது பலர் பலவிதமாகப் பேசினர். திருமணத்திற்குப் பிறகு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத் தெரியும். விவாகரத்து பெற்று விட்டேன் என தெரிந்த பிறகு என்னைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வெளியானது. அதேபோல் பைத்தியக்காரத்தனமான கருத்துகளும் முன்வைக்கப்பட்டது.
என்னை விமர்சித்தவர்கள் என் குணத்தை தவறாக பேசினார்கள். என் குடும்பத்தை அவதூறாக பேசினார்கள். திருமணம் என்பது ஒரு சிறிய சாதாரண விஷயம் கிடையாது. இவ்வளவு பணம் செலவழித்து விட்டு பிரிந்து செல்ல யாரும் விரும்ப மாட்டார்கள். அதேசமயம் திருமணம் செய்துக் கொள்ள நினைப்பவர்கள் அதற்கு முன் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது மிக முக்கியம். திருமணம் முடிந்த பிறகு என்னுடைய சூழ்நிலைகள் மாறியது. விவாகரத்து பெறலாம் என நினைக்கும்போது என் குடும்பத்தினர் ஆதரவளித்தனர். குறிப்பாக என் தந்தை மிக உறுதுணையாக இருந்தார். அதுதான் நான் மன வலிமையுடன் இருக்க காரணமாக அமைந்தது. விவாகரத்து கிடைத்தபோது நான் நிறைய அழுதேன். அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினமாக இருந்தது. சொல்லப்போனால் அது எனக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. யாரையும் எளிதில் நம்பக்கூடாது என கற்றுக் கொண்டேன் என நிஹாரிகா கூறியுள்ளார்.