5 வருட இடைவெளிக்குப் பின் நடிகை நிஹாரிகா தமிழில் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. 


கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளாவார். அந்த படத்துக்குப் பின் அவர் தமிழில் நடிக்கவில்லை. இதனிடையே 2020 ஆம் ஆண்டு சைதன்யா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிஹாரிகா 2023 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 


இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் படங்களில் முழு வீச்சில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தமிழ் படத்தில் கமிட்டாகியுள்ளார். SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் “மெட்ராஸ்காரன்”.  மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிகும் நிலையில் இப்படம் புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகிறது.


இப்படத்தில் நடிகை நிஹாரிகா இணைந்துள்ளார். தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து, தமிழுக்கு நடிக்கும் நிஹாரிகா ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். வெப் சீரிஸ்கள் என பல படைப்புகளை தயாரித்து வருகிறார்.


ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம்.  ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். 


மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். மெட்ராஸ் காரன் படத்தில் ஷேன் நிகாம் ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார். 


தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.படம்  பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.