90 ஆண்டுகளாக கோலிவுட் சினிமா வரலாற்றில் எத்தனையோ நடிகைகள் வந்திருக்கிறார்கள், வென்றிருக்கிறார்கள், சென்றிருக்கிறார்கள். ஆனால் அண்டை மாநிலத்தில் இருந்து வந்து கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து தமிழ்நாட்டில் கொண்டாடித் தீர்க்கப்படும் நயன்தாரா என்றைக்குமே ஸ்பெஷல் தான்!
தமிழ் சினிமாவில் தன் 20-வது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் நயன், இன்று தன் 38-வது வயதில் தன் இரட்டைக் குழந்தைகளுடன் இன்று (நவ.18) கொண்டாடுகிறார்.
”என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது” எனும் பில்லா 2 பட அஜித்தின் வசனம், நயன்தாராவுக்கு முற்றிலும் பொருந்தும்.
கோலிவுட்டில் கவர்ச்சி, நடிப்புத்திறமை என அனைத்திலும் உச்சம் எட்டினாலும் சில படங்களில் ஒரு நடிகை காணாமல் போவது தான் மிக எளிதான விஷயம். எம்ஜிஆர் காலம் தொடங்கி இன்று வரை 60 வயதிலும் நடிகர்கள் டாப் ஹீரோக்களாக வலம் வரும் தமிழ் சினிமாவில், 30களுக்கு மேல் ஹீரோயின்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு தள்ளப்படும் போக்கே சில ஆண்டுகளுக்கு முன் இருந்து வந்தது.
இத்தகையை ஹீரோயின்களுக்கான வயது தடையை இன்றைய தமிழ் சினிமாவில் உடைத்து, திருமணத்துக்குப் பின்னும் மாஸ் ஹீரோயினாக வலம் வரும் வகையில் தன் கரியரை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் நயன்தாரா.
இன்றைய தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையான மாஸ் நடிகையாகவும், ஹீரோயின் சார்ந்த கதைகளுக்கான மார்க்கெட்டை திறந்து வைத்ததிலும் நயன்தாராவின் பங்கு என்றுமே இன்றியமையாதது.
மிக மோசமான விமர்சனங்கள், வசவுகள் தாண்டி இத்தனை அன்பு, வெற்றி, கொண்டாட்டங்களுடன் தன் தனிப்பட்ட வாழ்வையும் ஒரு சாம்ராஜ்யம் போல் கட்டமைத்து ராணியாக வலம் வரும் நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ஹேப்பி பர்த்டே தங்கமே!