நயன்தாரா


நடிகை நயன்தாரா சமீப காலமாக தொடர் சர்ச்சைக்குள் சிக்கி வருகிறார். நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷை விமர்சித்து நயன்தாரா வைத்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது ரஜினி பற்றி நயன்தாரா பேசிய கருத்து ஒன்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா


நயன்தாரா தனது நடிப்பு பயணத்தை தொடங்கியதே பெரிய ஸ்டார்களின் படங்களில் தான். மலையாளத்தில் மம்மூட்டி , மோகன்லால் படங்களில் நடித்த நயன்தாரா சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இரண்டாவது படமாக ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது.  சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை நயன்தாரா இரண்டாவது படத்தில் ரஜினியுடன் நடித்த தனது அனுபவத்தைப் பற்றி பேசினார். அப்போது அவர் இப்படி கூறினார் " நான் பெரிதாக படங்கள் பார்த்ததில்லை. ரஜினி சார் அவ்வளவு பெரிய நடிகர் என்று எனக்கு அப்போது தெரியாது. ஒருவகையில் என்னுடைய அறியாமை நான் எந்த வித அழுத்தமும் இல்லாமல் நான் தன்னம்பிக்கையுடன் நடிக்க உதவியது என்று சொல்லலாம் " என்று நயன்தாரா தெரிவித்தார். 


கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்


நயன்தாராவின் இக்கருத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியை யார் என்று தெரியாது என்று சொல்லி நயன்தாரா ரஜினியை அவமானப்படுத்தியதாக பலர் சமூக வலைதளத்தில் நயனை விமர்சித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து நயன்தாராவின் கருத்தை தெளிவுபடுத்தும் விதமாக மற்றொரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரஜினியைப் பற்றி பேசிய நயன்தாரா ' ரஜினி சார் ஒரு பெரிய நடிகர் என்று எனக்கு தெரியும் ஆனால் இங்கு அவரை நாம் கடவுளுக்கு நிகராக கொண்டாடுகிறோம். அது எனக்கு அப்போது தெரியாது" என அவர் தெரிவித்துள்ளார். 


நயன்தாரா எப்போதும் தனது கருத்தை வெளிப்படையாக பேசி வருகிறார். அவர் பேசியதில் ரஜினியை அவமானப்படுத்தும் விதமாக எதுவும் இல்லை என நயனுக்கு ஆதரவு குரல்களும் எழுந்துள்ளன.