மலையாள நடிகை மமிதா பைஜூ சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சமீப காலமாக நடிகைகள் சமூக வலைதளங்களில் எதிர்கொள்ளும் மன அழுத்தம், தனியுரிமை மீறல், தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் ஆன்லைன் தொல்லைகள் குறித்து பலரும் வெளிப்படையாக பேசி வரும் நிலையில், நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் கயடு லோஹரைத் தொடர்ந்து மமிதா பைஜூவும் இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் மலையாள சினிமாவைத் தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் பெற்று வரும் இளம் நடிகைகளில் ஒருவர் மமிதா பைஜூ. குறிப்பாக இளம் ரசிகர்களிடையே அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, படப்பிடிப்பு அனுபவங்கள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மமிதா பைஜூ, "சமூக வலைதளங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். விரைவில் மீண்டும் சந்திப்போம். என்னுடைய படங்கள் தொடர்பான அப்டேட்களை என்னுடைய குழுவினர் தொடர்ந்து பகிர்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பாக நடிகை கயடு லோஹரும் சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து வரும் எதிர்மறை கருத்துகள், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பரவும் வதந்திகள் மற்றும் சமூக வலைதள அழுத்தங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மியும் மனநலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிக இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக நடிகைகள் மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள், ட்ரோலிங், உருவகேலிகள், தவறான தகவல் பரப்பல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்க உதவும் தளங்களாக இருந்தாலும், அதே நேரத்தில் மனநல பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடமாகவும் சமூக வலைதளங்கள் மாறிவருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே பல பிரபலங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுக்கும் முடிவை தேர்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், மமிதா பைஜூ தற்போது தமிழிலும் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் திரைப்படத்திலும், பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திலும் மமிதா பைஜூ நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
