நான் எம்ஜிஆரிடம் நேரடியாக சென்றும் உதவி கேட்டும் அவர் அன்றைய நேரத்தில் செய்ய மறுத்து விட்டார் என நடிகை மேஜிக் ராதிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


மதத்தால் வந்த பிரிவு 


நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “என்னுடைய திருமணம் காதல் திருமணமாகும். நான் ஜெய்சங்கரின் நாடக குழுவில் நடித்து வந்தேன். ஒரு காமெடி கதையில், நான் அவரின் தங்கையாக நடித்தேன். அந்த குரூப்பில் இருந்த கிடார் வாசிப்பாளரான சந்திரசேகரை தான் நான் காதலித்தேன். அவரும் ஒகே சொன்னார். அவர் பிராமணம் சமூகத்தை சேர்ந்தவர். நான் கிறிஸ்டியன். ஆனாலும் என் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. காதலுக்கு கண் இல்லை என சொல்வதைபோல முறைப்படி அனுமதி பெற்று சர்ச்சில் தான் திருமணம் செய்து கொண்டோம்.


திருமணத்துக்குப் பிறகு அவர் என்னை இந்து முறைகளை பின்பற்ற சொன்னார். ரொம்ப டார்ச்சர் செய்தார். நான் என் கடவுளை விட்டுக்கொடுக்க முடியாது என சொல்லி விட்டேன். அதன்பிறகே நாங்கள் பிரியலாம் என முடிவெடுத்தோம்.சந்திரசேகர் ரொம்ப நல்ல மனிதர். உளவியல் ரீதியாக என்னை எந்த டார்ச்சரும் செய்தது இல்லை. இந்த கடவுள் விஷயத்தில் தான் பிரச்சினை ஆனது. என்னை சர்ச்சுக்கு செல்லக்கூடாது என சொன்னார். பிரிய வேண்டும் என இருந்தால் என்ன செய்வது அப்படித்தான் ஆக வேண்டும். 


எனக்கு சிவாஜியை பார்த்தாலே பயம். அவருடைய நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனத்தை பேசி தான் நாமும் நடிக்கலாம் என சினிமாவுக்கு வந்தேன். அதேபோல் தால் எம்ஜிஆரும் ரொம்ப அன்பானவர். ஒரு குடும்ப உறுப்பினர் போல தான் பழகுவார். மலையாளத்தில் அதே அன்பு இருந்தது. சிவாஜி, எம்ஜிஆரை ஷூட்டிங்கில் தான் பார்ப்பேன். நான் எம்ஜிஆரிடம் சொல்லாமலே திருமணம் செய்து கொண்டேன். அதுதான் நான் செய்த தப்பு. அவசர அவசரமாக எனக்கு கல்யாணம் நடந்தது. 


எம்ஜிஆருடன் மனஸ்தாபம்


ஒருநாள் என்னை சத்யா ஸ்டூடியோவுக்கு அழைத்தார். என் கணவர் வெளியே காரில் இருந்த நிலையில் உள்ளே சென்று அவரிடம் என்ன விஷயம் என கேட்டேன். உன்னை ஒரு 5 படங்களில் புக் செய்யலாம் என முடிவு செய்திருக்கிறேன் என எம்ஜிஆர் சொன்னார். நான் அவரிடம், “எனக்கு திருமணமாகி விட்டது. என் கணவரிடம் ஒரு வார்த்தை கேட்டு வந்து விடவா?” என கேட்டேன். சரி என சொன்னதும் வெளியே வந்து கணவரிடம் விஷயத்தை சொன்னேன். 


அதற்கு என் கணவர், ‘அதெல்லாம் முடியாது. உனக்கு நான் வேண்டுமா? எம்ஜிஆர் வேண்டுமா? என நீயே முடிவு பண்ணிக்க!” என வெளிப்படையாக சொல்லி விட்டார். மேலும், “கல்யாணம் ஆகி 10 நாட்கள் ஆகிறது. நீயே யோசித்துக்கொள்” என சொல்லி விட்டார். நான் எம்ஜிஆரிடம் வந்து இது செட்டாகாது என கூறிவிட்டேன். அவர் எதுவும் சொல்லாமல் பரவாயில்லை என ஒரே வார்த்தையில் கூறி விட்டார். 


ஆனால் எம்ஜிஆருக்கு என்மேல் கோபம் இருந்தது என்பது ஒரு நிகழ்வின் மூலம் தெரிந்தது. எங்களுக்கு குழந்தை பிறந்த நிலையில் விவாகரத்து ஆனது. கோர்ட்டில் என்னுடைய மகன் என் கணவர் வீட்டுக்கு செல்லும் நிலை உருவானது. நான் ராமாவரம் தோட்டத்தில் அதிகாலை 4 மணிக்கு சென்று என் பையன் என்னை விட்டு போகப்போகிறான். உதவி பண்ணுங்க என சொன்னேன். ஆனால் எம்ஜிஆர், ‘என்னால் முடியாது. அன்னைக்கு நான் சொன்னப்ப என் பேச்சை கேட்கல. உன்னோட திறமையை வைத்து குழந்தையை மீட்டுக்கொள்’ என வெளியே வந்து சொல்லாமல் போன் மூலம் தான் பேசினார். அன்றிலிருந்து எங்களுக்குள்ளான தொடர்பு நின்று போனது” என மேஜிக் ராதிகா கூறியுள்ளார்.