ஜிவா நகை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை கிருதி சனோனின் ஆடை சர்ச்சைக்குள்ளான நிலையில் அந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

2026ம் ஆண்டுக்கான ரக்‌ஷா பந்தன் பண்டிகை வரும் ஆகஸ்ட் 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை வடமாநிலங்களில் பிரபலம் என்றாலும் தற்போது தமிழ்நாட்டிலும் கூட அனைவராலும் கொண்டாடப்படுகிறது. வாழ்த்துகளும் பரிமாறப்படுகிறது. இப்படியான நிலையில் ஜிவா நகை நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட அதில் நடிகை கிருதி சனோன் நடித்திருந்தார். 

அதில் அவர் வெள்ளை நிற உடையணிந்த நிலையில் ராக்கி கயிறை நாய்க்கும் கட்டும் காட்சிகளும் இடம்பெற்றது. விளம்பரத்தில் கிருதி சனோன் அணிந்திருந்த ஆடை கடும் சர்ச்சைகளை கிளப்பியது. நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் இதனை கடுமையாக கண்டித்தார். பிகினி உடை அணிந்து ராக்கி கட்டியதாக கிருதி சனோனை சாடினார். பலரும் கிருதி சனோனுக்கு ஆதரவாக பதிவிட தொடங்கினர். 

Continues below advertisement

திருவிழாக்களின் சாராம்சம் ஆடையில் இல்லை

இதனிடையே தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிருதி சனோன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டார். அதில், திருவிழாக்களின் உண்மையான சாராம்சம் நாம் அணியும் ஆடைகளில் இல்லை. மாறாக அந்த மரபுகளின் மீது நாம் கொண்டிருக்கும் உணர்வுகளிலும் அர்த்தத்திலும்தான் உள்ளது.

ரக்‌ஷா பந்தன் என்பது பாதுகாப்பின் ஒரு பிணைப்பு. நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக்கொள்கிறோம். ஒரு சகோதரன் செய்யும் அதே பாதுகாப்பை நாங்களும் ஒருவருக்கொருவர் வழங்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் ஒருவருக்கொருவர் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்திக்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரை, இந்தப் பிரார்த்தனையும் உறுதியும் எங்கள் செல்ல நாய் குட்டிகளுக்கும் பொருந்தும்.  ஏனென்றால், அவையும் எங்கள் குடும்பத்தில் ஒரு பகுதிதானே. மேலும் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துவதை நாம் எப்போது நிறுத்தப்போகிறோம்? பாரம்பரிய ஆடைகள் காலப்போக்கில் பல மாற்றங்களைக் கண்டுவிட்டன.

ஆனாலும் ஒரு பெண்ணின் கலாச்சாரத்தின் மீதான மரியாதை இன்றும் அவள் அணியும் ஆடைகளை வைத்தே அளவிடப்படுகிறது.  கலாச்சாரமும் மரபுகளும் ஒரு பெண்ணின் இதயத்தில்தான் உள்ளனவே தவிர, அவள் அணியும் ஆடையின் கழுத்து வடிவமைப்பிலோ அல்லது ஆடையின் வகையிலோ இல்லை என தெரிவித்தார். 

விளம்பரம் திடீர் நீக்கம்

இந்நிலையில் ஜிவா நகை நிறுவனம் அந்த விளம்பரத்தை இணையத்தில் இருந்து நீக்கியுள்ளது. அதில், “இந்திய கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் பண்டிகைகள் மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும் ஆழ்ந்த மரியாதையும் உண்டு. ஒரு பிராண்டாக, இந்த மகிழ்ச்சியான தருணங்களை முழு குடும்பத்துடன் கொண்டாடுவதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். இம்முறை, அந்த அன்பையும் கொண்டாட்டத்தையும் எங்கள் செல்லப் பிராணிகளுக்கும் விரிவுபடுத்த விரும்பினோம்.சமீபத்திய விளம்பரம், சமூகத்தின் சில பிரிவினரின் உணர்வுகளை அறியாமல் புண்படுத்தியிருந்தால்மரியாதை நிமித்தமாக, அந்த விளம்பரத்தை அனைத்து ஊடகங்களிலிருந்தும் திரும்பப் பெற்றுள்ளோம்” என கூறியுள்ளார்.