நடிகை குஷ்புவின் மாமியார் தெய்வானையை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் இருக்கும் வைணவ தளங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கேரளா சென்றிருந்த அவர் தற்போது 3 நாள் பயணமாக தமிழக வந்துள்ளார். இந்த பயணத்தின் பகுதியாக சென்னை வந்த அவர் நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிய தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் பெற்றார்.மூன்றாவது நாளான இன்று ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலுக்கு சென்று தரிசனம் பெற உள்ளார்.
மாமியாரின் ஆசையை நிறைவேற்றிய குஷ்பு
இந்நிலையில் தமிழக வந்துள்ள பிரதமர் மோடியை தமிழக பாஜக நிர்வாகிகள் சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு தனது மாமியாருடம் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இயக்குநர் சுந்தர் சி யின் தாயார் மற்றும் நடிகை குஷ்புவின் மாமியாரான தெய்வானைக்கு 92 வயதாகிறது. மோடியை தீவிரமாக ஆதரிக்கும் அவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதற்கு தான் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்கிற ஆசையை குஷ்புவிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் நடிகை குஷ்பு தனது மாமியாரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரை பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.
தெய்வானையை சந்தித்த பிரதமர் மோடி அவரிடம் கைகூப்பி ஆசீர்வாதமும் பெற்றுள்ளார். இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் குஷ்பு பகிர்ந்துள்ளார். “எனது மாமியாருக்கு 92 வயதாகிறது , தனது வாழ்நாளில் ஒருமுறையாவது பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. உலகத்தில் அதிகம் பிரபலமான அதே நேரத்தில் அதிகம் விரும்பப்படும் ஒரு நபர் பிரதமர் மோடி அவரை மரியாதையுடனும் அன்புடனும் வரவேற்றார். ஒரு தாயிடம் தன் மகன் பேசுவதுபோல் அவரது வார்த்தைகள் இருந்தன. இப்படியான ஒரு மனிதனை அனைவரும் நேசிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உண்மையிலேயே இவர் கடவுளால் தேர்தெடுக்கப்பட்டவர். ’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.