தும்பா, அன்பிற்கினியாள் திரைப்படங்களில் அசத்திய கீர்த்தி பாண்டியன் அடுத்து கண்ணகி திரைப்படம் மூலம் திரையில் தோன்றவுள்ளார். இந்நிலையில் இப்போதைய சினிமா குறித்து பேசியுள்ளார் கீர்த்தி.


நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் சமீபத்தில் அன்பிற்கினியாள் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் கீர்த்தியின் தந்தை கதாபாத்திரத்தில் அருண் பாண்டியனே நடித்திருந்தார். மலையாள படமான ஹெலன் படத்தின் ரீமேக்கான அன்பிற்கினியாள் கோலிவுட்டிலும் கவனம் பெற்றது. இப்படத்துக்கு முன்னதாகவே தும்பா திரைப்படத்திலும் கீர்த்தி நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது கீர்த்தி பாண்டியன் கண்ணகி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் லுக் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. 




கண்ணகி குறித்து பேசிய கீர்த்தி பாண்டியன், '' கண்ணகி திரைப்படத்தின் வாய்ப்பு எனக்கு தும்பாவுக்கு முன்பே கிடைத்தது. கண்ணகி திரைப்படத்தின் இயக்குநர் என்னை அணுகிய போது, அப்படத்தின் கதாபாத்திரத்துக்கு நான் சரியாக இருப்பேன் எனக்கூறினார். படத்தின் லுக் வெளியிடப்பட்டாலும் இயக்குநரின் பெயர் வெளியிடப்படவில்லை. இயக்குநர் அவரது பெயரை எங்கேயும் டேக் செய்யவோ, குறிப்பிடவோ வேண்டாமென கேட்டுக்கொண்டார். படத்தின் போஸ்டரில் கூட அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.  அவர் வித்தியாசமான திட்டம் வைத்துள்ளார். அவரோடு பணியாற்றியது மகிழ்ச்சி. நான் இரண்டு வருங்களுக்கு மேலாக அந்த குழுவோடு பணியாற்றி வருகிறேன். இப்போது தான் இறுதிக்கட்டத்துக்கு படம் வந்துள்ளது. இடையே கொரோனா வந்ததால் சற்று தாமதம். ஆனாலும் கொரோனா முன்னெச்சரிக்கையை முறையாக கடைபிடித்தே படப்பிடிப்பை நடத்தினோம். மொத்த படக்குழுவுமே முன்னெச்சரிக்கையை முறையாக கடைபிடித்தார்கள். ஒருவர் கூட கவனக்குறைவாக இருக்கவில்லை. மிகவும் பொறுப்பான ஒரு படக்குழு என்றார்.


படத்தின் கதாபாத்திரம் குறித்து அதிகம் வெளியிடாத கீர்த்தி பாண்டியன், படத்தில் தான் கர்ப்பிணியாக நடிப்பதாக தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், முன்னதாகவே இந்த கதாபாத்திரம் குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணியாக நடிப்பது எனக்கு வித்தியாசமாக இருக்குமென தோன்றியது. நான் மிகவும் மெலிந்தே இருப்பேன். ஆனால் இந்த படத்துக்கு நான் 10கிலோ வரை உடல் எடையை அதிகரித்தேன். இது எனக்கு அதிசயம் தான். ஆனால் என் உடல் எடையை அதிகரிக்க இயக்குநர் கேட்கவில்லை. நானாகவேதான் உடல் எடையை அதிகரித்தேன். இந்தப்படம் கடந்த மார்ச் மாதமே வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் கொரோனாவால் இடைவெளி உண்டாகிவிட்டது. ஆனாலும் என் உடல் எடையை அதிகரிக்க கொரோனா இடைவெளிதான் எனக்கு உதவியது என்றார்.




முன்னதாக தன்னுடைய முதல் படத்துக்கு முன்னதாக தன் நிறம் காரணமாக பலர் தன்னை நிராகரித்ததாக கீர்த்தி பாண்டியன் உணர்ச்சிவசமாக பேசி இருந்தார். அது குறித்து தற்போது பேசிய கீர்த்தி பாண்டியன், 'இப்போது சினிமாத்துறை மாறிவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் கருப்பு நிறத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இன்னும் நீண்ட மாறுதல்களை சினிமா காண வேண்டியுள்ளது. ஒருவர் சகோதரியாக நடித்தால் அவருக்கு தொடர்ந்து அப்படியாக கதாபாத்திரங்களே வருகின்றன.இதெல்லாம் மாறவேண்டுமென நினைக்கிறேன். கதையை முன்னோர்த்தி நகர்த்தி தாங்கிச் செல்லும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவே விரும்புகிறேன். பெண்ணை மையப்படுத்திய படங்கள் அல்லது காதல் நகைச்சுவையாக இருந்தாலும், எனது கதாபாத்திரம் ஒருவித தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்


வாரிசு ஆதிக்கம் குறித்து பேசிய கீர்த்தி பாண்டியன், வாரிசு ஆதிக்கம் என்பது அனைத்து துறையிலும் தான் உள்ளது. அதனை திரைத்துறை மட்டும் என சுருக்கிவிடமுடியாது. என் கதையை எடுத்துக்கொண்டால், நடனமும், மேடை நடிப்புமே என்னை திரைத்துறைக்கு கொண்டு வந்தது. என்னுடைய எதிர்கால திட்டத்தில் என் தந்தை எதுவும் தலையிடுவதில்லை. அவர் என்னை சுதந்திரமாக இயங்கவே அனுமதிக்கிறார் என்றார்.


Source: Timesofindia