தனது மகனிற்கு சாதியில்லா சான்றிதழை பெற்றுள்ளத் தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகை கயல் ஆனந்தி


கயல் ஆனந்தி என்று ரசிகர்களால் அறியப்படுபவர் ஆனந்தி. தமிழ் திரையுலகிற்கு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனந்தியின் முதல் திரைப்படம் அவருக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் பெற்றுத் தரவில்லை என்றாலும் பிரபு சாலமன் இயக்கிய கயல் திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் இவரது முகத்தை அனைவருக்கும் பரிச்சயமாக்கியது. கயல் ஆனந்தி என்று அவர் இன்றுவரை அழைக்கப் படுவதற்கு காரணமும் இந்தப் படம்தான். த்ரிஷா இல்லனா நயந்தாரா, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களின் மூலம் கயல் ஆனந்திக்கு ஒரு தனித்த அடையாளம் உருவாகியது.


கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் நடித்தார் கயல் ஆனந்தி. சாதிய ஒடுக்குமுறையை மையக் கதையாக பேசிய  பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் மற்றும் ரசிகர்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனந்தி நடித்த ஜோ வின் கதாபாத்திரம் இந்த படத்தில் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது. தனது தந்தையும் தன்னைச் சுற்றி இருக்கும் சாதிய கட்டமைப்புகளை பற்றி அறியாமல் தனது குடும்பத்தின்மேல் அதிகப்படியான பாசம் வைத்திருக்கும் கதாபாத்திரமாக நடித்திருந்தார் கயல் ஆனந்தி. இதன் காரணத்தால் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


ஆனந்தி கடந்த 2021 ஆம் ஆண்டு சாக்ரடீஸ் என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.இதற்கு அடுத்த ஆண்டு இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. சில காலம் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஆனந்தி மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளர். தற்போது கயல் ஆனந்தி இராவணக் கோட்டம் திரைப்படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இராவணக் கோட்டம் வருகிற மே 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது  இந்தப் படத்தின் புரோமோஷன்  நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட கயல் ஆனந்தி தனது மகன் குறித்த தகவலை பகிர்ந்துகொண்டார். தனது மகனிற்கு சாதியில்லா சான்றிதழை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆனந்தி.


தான் வாசித்த புத்தகங்கள் மற்றும் தனது நண்பர்கள் உடனான உரையாடல்களே தனது இந்த மாற்றத்திற்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.


கயல் ஆனந்தி தற்போது நடித்துள்ள இராவனக் கோட்டம் படம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. இரு சாதியினருக்கிடையிலான பிரச்சனையை கதைக்களமாக கொண்ட இராவணக் கோட்டம் திரைப்படத்தின் டெரெய்லர் அண்மையில் வெளியானது. இந்த ட்ரெய்லரில் ஒரு குறிபிட்ட சாதியை இழிபடுத்தும் வகையில் வசனம் அமைதிருப்பதாக கூறி பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் இந்த திரைப்படத்தை தடை செய்யக் கோரிக்கை எழுந்தது. இராவணக் கோட்டம் படத்தை இயக்கியவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். மதயாணைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.