திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) அண்மையில் (ஜூலை 15) காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 


1980 களில் இருந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் தீவிர முன்னிலையில் இருந்த நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக தொழில்துறையிலும் முத்திரை பதித்தார்.


1978 ஆம் ஆண்டு இயக்குனர் பரதனின் ஆரவம் திரைப்படத்தில் அறிமுகமானார். அவருடைய சில தகரம், ஆரோகணம், பன்னீர் புஷ்பங்கள், தன்மாத்ரா, 22 பெண் கோட்டயம் மற்றும் பெங்களூர் நாட்கள் போன்ற பிரபலமான மலையாளத் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.


கடைசியாக மம்மூட்டி நடித்த 'சிபிஐ5: தி பிரைன்' படத்திலும், மோகன்லால் படமான 'பரோஸ்: கார்டியன் ஆஃப் டி'காமா'ஸ் ட்ரெஷரிலும் பிரதாப் போத்தன் நடித்தார். இவர் மலையாளத்தில் ரிதுபேதம், டெய்சி மற்றும் ஒரு யாத்ரமொழி ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார். 'கிரீன் ஆப்பிள்' என்ற விளம்பர நிறுவனத்தையும் வைத்திருந்தார்.


அவரது மறைவுக்கு பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். அவர் மறைந்த நாளில் அவரது வீட்டிற்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்திருந்தார் நடிகை கனிகா. அப்போது அவர், "பிரதாப் போத்தன் சார் ஒரு நல்ல இயக்குநர். அதையும் தாண்டி நல்ல நண்பர். மலையாள நடிகர் சங்கத்தின் சார்பில் தான் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். அவர் ஒருமுறை என்னிடம் பேசும்போது, இறப்பு எனக்கு வரும்போது அது என் தூக்கத்திலேயே நிகழ்ந்துவிட வேண்டும் என்பார். உண்மையில் அப்படித்தான் நடந்ததுபோல. அவருடைய முகத்தைப் பார்க்கும் போது அதில் அவ்வளவு அமைதி நிலவுகிறது. அவருடைய மறைவு திரையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். நாங்கள் உங்களை மிஸ் செய்வோம் சார்" என்றார்.


தமிழ் சினிமாவில் இயக்குநர் பிரதாப் போத்தனின் பங்கு :


தமிழில் ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரதாப் தான் இயக்கிய ’மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவரது மறைவிற்கு பல திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


கவனம் பெற்ற கடைசிப் பதிவு:


மறைந்த பிரதாப் போத்தன் இறுதியாக எழுதிய ஃபேஸ்புக் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், வாழ்க்கையின் பொருள் என்ன? என ஒருவர் கேட்ட கேள்விக்கு, “எனக்கு வாழ்க்கையின் பொருள் தெரிந்தால், நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இப்போதைக்கு, பிழைத்துக்கிடப்பதே வாழ்வின் பொருள் என நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.