நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள “எமர்ஜென்ஸி” (Emergency) படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சர்ச்சைகளுக்குப் பெயர் போன இவர் தமிழில் 2007 ஆம் ஆண்டு வெளியான “தாம் தூம்” படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார். ஆனால் அதன்பிறகு அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் கங்கனா மீண்டும் ரீ-எண்ட்ரீ கொடுத்தார். இதில் ஜெயலலிதாவின் கேரக்டரில் அவர் நடித்தது பாராட்டையும், விமர்சனத்தையும் பெற்றது. 


இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு வெளியான சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினாக கங்கனா தோன்றினார். இப்படம் சுமாரான வெற்றியையே பெற்றது. இதற்கிடையில் கங்கனா ரணாவத் தாகத், தேஜஸ் என இந்தியில் தான் நடித்த படங்களும் தோல்வியடைந்ததால் கட்டாய வெற்றியை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். இதனால் அடுத்த படத்தை தானே இயக்கும் அதிரடி முடிவை மேற்கொண்டார். 






அதன்படி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும்  ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரை அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து “எமர்ஜென்சி” என்ற படத்தை எடுத்துள்ளார். இதில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அச்சு அசலாக அவரது தோற்றம் இந்திரா காந்தியைப் பார்ப்பது போலவே உள்ளதாக பலரும் தெரிவித்தனர்.  இப்படத்துக்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை எழுதியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 


முதலில் இப்படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பாண்டு ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என மாற்றப்பட்டது. ஆனால் சொன்ன தேதியில் படம் வெளியாகவில்லை. இதற்கிடையில் மக்களவை தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியில் கங்கனா ரனாவத் எம்.பி.யாக தேர்வாகியுள்ளார்.  


இந்நிலையில் எம்.பி.,யான கையோடு தனது எமர்ஜென்சி படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் கங்கனா இறங்கியுள்ளார். அதன்படி இப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் “எமர்ஜென்சி காலம் அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சுதந்திர இந்தியாவின் இருண்ட காலமான எமர்ஜென்சியின் 50வது ஆண்டுகாலம் தொடக்கம் என குறிப்பிட்டுள்ளார். இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றின் மிகவும் சர்ச்சைக்குரிய அத்தியாயத்தின் தொகுப்பு” எனவும் குறிப்பிட்டுள்ளார்.