தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை ஏவிஎம் நிறுவனத்திற்கு உண்டு. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் பல வெற்றிப்படங்களை தயாரித்த பெருமை கொண்ட ஏவிஎம் நிறுவனத்தை, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு பொறுப்புடன் நடத்தி வெற்றி கண்டவர் ஏவிஎம் சரவணன். கடந்த 4ம் தேதி காலமானார்.

Continues below advertisement

பழம்பெரும் நடிகை காஞ்சனா:

அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஏவிஎம் சரவணன் மறைவிற்கு ஆட்டோவில் வந்து அஞ்சலி செலுத்தினார் பழம்பெரும் நடிகை காஞ்சனா. அவர் தன்னை தானே நிருபர்களிடம் அறிமுகப்படுத்தி ஏவிஎம் சரவணன் பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இன்றைய கால சூழலில் இரண்டு, மூன்று படங்களில் நடித்தாலே கார்களில் ஆடம்பரமாக உலா வருபவர்கள் மத்தியில் மிக மிக எளிமையாக வந்து அஞ்சலி செலுத்தி திரும்பினார் காஞ்சனா. யார் இவர்? என்று கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

கதாநாயகியானது எப்படி?

நடிகை காஞ்சனா தமிழ், தெலுங்கு, கன்னடம் சினிமாவை கலக்கிய மிகப்பெரிய நடிகை ஆவார். 1939ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் வசுந்தரா தேவி. விமான பணிப்பெண்ணான இவரை அப்போது பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் ஒரு முறை கண்டார். அவர் இவரை பார்த்த உடனே தனது படத்தில் கதாநாயகியாக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். 

வசுந்தரா தேவி காஞ்சனா என்று பெயர் மாற்றப்பட்டு ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.  படத்தின் வெற்றியைக் காட்டிலும் காஞ்சனாவின் அழகும், அவரது வசீகரமான முகமும் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. இதையடுத்து, தெலுங்கு, கன்னடத்திலும் வாய்ப்புகள் அவருக்கு குவியத் தொடங்கியது. 

80 கோடி ரூபாய் சொத்து தானம்:

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். காதலிக்க நேரமில்லை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, அதே கண்கள், பாமா விஜயம், சாந்தி நிலையம் ஆகிய படங்கள் தமிழில் மிகவும் பிரபலம் ஆகும். தெலுங்கில் என்டிஆர், நாகேஸ்வர ராவ் என பிரபலங்களுடன் நடித்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமலே தனது வாழ்வை கழித்துவிட்டார். தற்போது தங்கையின் பராமரிப்பில் சென்னையில் உள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சம்பாதித்ததன் மூலமாக தி.நகரில் சொந்தமாக இடங்களை வாங்கியுள்ளார். ஆனால், அவரை அவரது உறவினர்கள் ஏமாற்றி அபகரித்துள்ளனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடியுள்ளார். அப்போது, தனது சொத்து தனக்கு மீண்டும் கிடைத்தால் அதை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிடுவதாக வேண்டிக் கொண்டுள்ளார்.

அந்த சொத்து அவருக்கு உரிமையானது என்று நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தவுடன், தான் வேண்டிக் கொண்டது போலவே தி.நகரில் தனக்கு சொந்தமான ரூபாய் 80 கோடி மதிப்பிலான சொத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துள்ளார். அந்த இடத்தில்தான் தற்போது திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பத்மாவதி கோயில் உள்ளது. 

ரசிகர்கள் வியப்பு:

கடைசியாக அர்ஜுன்ரெட்டி படத்தில் கதாநாயகனுக்கு பாட்டியாக நடித்தார்.  தமிழில் கடைசியாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா என்ற படத்தில் நடித்தார். காஞ்சனாவின் எளிமையையும், அவரது வள்ளல் தன்மையையும், அவரது பக்தியையும் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது 80 வயதை கடந்த காஞ்சனா தினமும் யோகா பயிற்சி செய்து வருவதுடன், ஆன்மீகத்திலும் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். அவரது வள்ளல் தன்மையையும், ஆன்மீக ஈடுபாட்டையும் ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.