நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாக உள்ள சத்யபாமா படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தமிழ், தெலுங்கு தொடங்கி இந்தி வரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.


இந்நிலையில் காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடிக்கும் சத்தியபாமா படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேரடி தெலுங்கு படமான சத்தியபாமா படத்தில் காஜல் போலீஸ் கதாபாத்திரம் ஏற்றுள்ள நிலையில், இந்தப் படத்தை அகில் தேகலா இயக்கியுள்ளார்.


இந்நிலையில், சிவப்பு நிற புடவையில் காவல் நிலையத்துக்கு வந்து குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கும் குற்றவாளிகளை வளையல் உடைந்து ரத்தம் சொட்ட காஜல் அடித்து நொறுக்கும் வகையில் இந்த டீசரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


இந்த டீசர் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கில் திருமணம் செய்து குழந்தைக்குத் தாயான காஜல் நடிப்பில் இருந்து விலகுவதாக முன்னதாக செய்திகள் வெளியான நிலையில், காஜல் அகர்வாலின் சத்தியபாமா பட டீசர் வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


 



தமிழ் சினிமாவில் சென்ற 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தின் மூலம் நடிகர் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமான காஜல் தன் குழந்தை போன்ற முகத்தாலும், துறுதுறு நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்தார்.


தெலுங்கில் ராஜமெளலி இயக்கிய மகதீரா திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்த காஜல், தமிழில் விஜய் , அஜித் , சூர்யா என டாப் ஸ்டார்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து அசத்தினார். மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக விளங்கிய காஜல் அங்கும் அனைத்து டாப் ஸ்டார்களுடனும் நடித்துள்ளார்.


தற்போது தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் காஜல் நடித்து வருகிறார். மற்றொருபுறம் தன் இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக வலம் வரும் காஜல் அகர்வால் தன் குழந்தையின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.