தமிழ் நடிகர்களை மட்டம் தட்டி பேசிய ஜோதிகா
நடிகை ஜோதிகா பாலிவுட் நடிகர்களுடன் தமிழ் நடிகர்களை ஒப்பிட்டு பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியில் மாதம் அஜய் தேவ்கன் உடன் அவர் இணைந்து நடித்த சைத்தான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜோதிகா. " அண்மையில் நான் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தேன். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் ஒரு ஒற்றுமையை பார்க்கிறேன். படப்பிடிப்பில் இருவரும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து போனார்கள். தமிழில் நான் கிட்டதட்ட எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். ஆனால் நான் நடித்த படத்தில் போஸ்டரில் கூட என் முகம் வராது. ஆனால் அஜய் , மம்மூட்டி போன்ற நடிகர்கள் சினிமாவிற்கு திருப்பி கொடுக்க நினைக்கிறார்கள். நிறைய பேர் சினிமாவில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். ஆனா ஒரு சிலர் தான் திருப்பி தர நினைக்கிறார்கள் " என ஜோதிகா பேசியுள்ளார்.
ஜோதிகா 1998 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'டோலி சஜாகே ரக்னா' படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அவருக்கு இந்தியில் முதல் படமே தோல்வி அடைந்தது. தொடர்ந்து தமிழில் அஜித் நடித்த வாலீ படத்தில் கேமியோ ரோலில் நடித்த ஜோதிகாவுக்கு தமிழ் ரசிகர்கள் பெரியளவில் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் , குஷி , ரிதம் , காக்க காக்க , தூள் , சந்திரமுகி , வேட்டையாடு விளையாடு , சில்லுனு ஒரு காதல் , மொழி என அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் குவிந்தன. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் ஜோதிகா. திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்ட ஜோதிகா மீண்டும் சோலோவாக படங்களில் நடிக்கத் தொடங்கினார். 36 வயதினிலே , ராட்ச்சசி , காற்றின் மொழி ஆகிய படங்களில் நாயகியாக நடித்த ஜோதிகா படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்தது. இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான ஜோதிகா இந்தியில் தான் நடித்த ப்ரோமோஷனின் போது தமிழ் நடிகர்களை மட்டம் தட்டி பேசியிருப்பது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. போஸ்டரில் கூட முகம் வராது என ஜோதிகா சொன்ன கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ் அவர் நடித்த படங்களின் போஸ்டர்களை பகிர்ந்து ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள் .