தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துகொள்வது குறித்த கேள்விக்கு மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகளும்  நடிகையுமான  ஜான்வி கபூர் பதிலளித்துள்ளார். 

ஜான்வி கபூர் 

80 களில்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை  ஸ்ரீதேவி. பின்னர் பாலிவுட்டிலும் சூப்பர் ஸ்டார் ஆன அவர், 1996-ல் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். ஶ்ரீதேவியைத் தொடர்ந்து அவரது மூத்த மகள்  ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இந்தி மொழியைத் தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படத்தில் நாயகியாக நடித்து கவனமீர்த்தார்.  இவர் அணியும் உடைகள், மேக்கோவர், ஸ்டைல் என எதுவாக இருந்தாலும் அடிக்கடி டிரெண்டிங்கில் காணப்படும். ஸ்ரீதேவியின் மகளாக இருந்தாலும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜான்வி, தற்போது காதல் வாழ்க்கை காரணமாகவும் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

காதலனை கரம்பிடிக்கப் போவது எப்போது ?

ஜான்வி, மஹாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன் ஷிகர் பஹாரியாவை பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளிப்படையாக பேசியதில்லை என்றாலும் காதலன்  பெயருடன் கூடிய நெக்லஸை ஜான்வி  அணிந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருவரின் காதலை உறுதிபடுத்தியது.  சினிமா வட்டாரங்களில், ஜான்வி – ஷிகர் ஜோடி விரைவில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து இருவரின் குடும்பங்களிடமோ, ஜான்வி அல்லது ஷிகரிடமோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

திருமணம் பற்றி ஜான்வி கபூர் 

ஜான்வி கபூர் இந்தியில் நடித்துள்ள பரம சுந்தரி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக அவர் நடித்துள்ள சன்னி சன்ஸ்காரி கி துல்சி குமாரி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியீட்டு விழாவில் ஜான்வி கபூரின் திருமணம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் " தற்போது நான் திரைப்படங்களில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய திருமணத்திற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது " என்று பதிலளித்துள்ளார்.