தெலுங்கு நடிகர் சுதீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோட்’ (G.O.A.T) திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை திவ்யபாரதி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
தமிழில் ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் சுதிகாலி சுதீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட போராட்டங்கள்!
இந்நிலையில், கோட் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற திவ்யபாரதி, படத்தின் உருவாக்கத்தின்போது சந்தித்த சவால்கள் குறித்து பேசினார். அப்போது படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் படத்தை முடிப்பதற்காக படக்குழுவினர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.
படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு கட்டத்தில், படத்தை பாதியிலேயே வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு இருந்ததாக திவ்யபாரதி தெரிவித்தார். ஆனால், படத்தின் மீதான ஆர்வத்தால் தயாரிப்பாளர் அந்த முடிவை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், தயாரிப்பாளரிடம் பேசியபோது, "சார், இந்தப் படத்தை கைவிட்டுவிடாதீர்கள். உங்களிடம் இந்தப் படத்தை முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. எப்படியாவது படத்தை முடித்துவிடுங்கள்" என்று தான் கண்ணீர் விட்டு கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
இதனைப் பேசிக்கொண்டிருந்தபோதே திவ்யபாரதி மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்கினார். தொடர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட அவர், "இன்று முழுவதும் அழக்கூடாது என்று என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன். அதிகமான அழுத்தத்தில் இருந்தேன். ஆனால், இறுதியில் அழுதுவிட்டேன். இதற்காக மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
கோட்
சுதிகாலி சுதீர் மற்றும் திவ்யபாரதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் பிரம்மாஜி, நிதின் பிரசன்னா, மொட்டை ராஜேந்திரன், ஆதுகளம் நரேன், சாம்பக் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராசூல் எல்லோர் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் முத்தாவரப்பு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மொகுல்லா சந்திரசேகர் ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
