விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தான் விலகியது குறித்து நடிகை தீபிகா விளக்கம் அளித்துள்ளார்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியல் ஸ்டோர். அந்த சீரியலில் நடித்த நடிகை தீபிகா திடீரென சீரியலில் இருந்து விலகினார். திடீரென சீரியலில் இருந்து ஏன் விலகினார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். அவர் சீரியலில் இருந்து ஏன் விலகினார் என பல்வேறு காரணங்களை ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தான் விலகியது குறித்து நடிகை தீபிகா விளக்கம் அளித்துள்ளார். தான் சீரியலில் இருந்து விலக முகப்பருவே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். யூடியூப் பக்கத்திற்கு பேசிய அவர், எனக்கும்,சம்பந்தப்பட்ட சேனலுக்கு தனிப்பட்ட பிரச்னை எதுவும் இல்லை. 




நான் சரியாக நடிக்கவில்லை என்றாலோ, அல்லது யார்கூடவாவது சண்டை போட்டு என்னை வெளியேற்றி இருந்தாலோ எனக்கு வருத்தமாக இருந்திருக்கும். முகத்தில் உள்ள பருக்கள் காரணமாவே வெளியேறினேன். முகத்தில் முகப்பரு வருவது என் தப்பு இல்லைதானே. முகம் என்றால் முகப்பரு வரத்தானே செய்யும். அதற்காக நான் சேனலையும் குறை கூறமாட்டேன். முகப்பருவுக்கான மருத்துவத்துக்கு அவர்கள் நிறைய நேரம் கொடுத்தார்கள். ஆனால் என்னால்தான் அந்த நேரத்துக்குள் சரி செய்யமுடியவில்லை. அதனால்தான் சீரியலில் இருந்து விலக வேண்டி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த விவகாரம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முக அழகு சார்ந்து திறமைகள் மறுக்கப்படுவது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். நிறம், முக அழகு சார்ந்து திறமைகள் மறுக்கப்படுவது திரைத்துறையில் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் சின்னத்திரையிலும் அது சத்தமில்லாமல் நடப்பது ஆரோக்கியமற்ற நிலை என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர். நடிகை தீபிகாவுக்கு ஆதரவாக பேசியுள்ள பலரும் திறமைக்கு என்றுமே அங்கீகாரம் உண்டு, மனம் தளராமல் உங்களது எதிர்காலத்தை தீர்மானியுங்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.