சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு பயணம் செய்தவர்களில் ஒருவர் தான் இன்று பிரபலமான நகைச்சுவை நடிகையாக குணச்சித்திர நடிகையாக கலக்கி வரும் நடிகை தீபா சங்கர். சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடரான 'மெட்டி ஒலி' தொடரில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார். இதுவே அவர் திரையில் தோன்றிய முதல் கதாபாத்திரம். அதை தொடர்ந்து ஏராளமான சீரியலில் நடித்து வந்த தீபா 2009ம் ஆண்டு வெளியான 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
பிஸியான பயணம் :
தீபாவுக்கு அடுத்தடுத்து நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம், சில்லு கருப்பட்டி, வீட்ல விசேஷம், சொப்பன சுந்தரி, தண்டட்டி, பொன் மாணிக்கவேல் என ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நகைச்சவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி சீசன் 2 , மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, நகைச்சவை ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்றுள்ளார். தற்போது 'வா வரலாம் வா' படத்தில் சிங்கம்புலியுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ள தீபா தன்னுடைய திரைப்பயணம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து இருந்தார்.
மிஸ்ஸான 'அண்ணாத்த' வாய்ப்பு :
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படத்தில் தீபா ஏற்கனவே ஒப்பந்தமான போது அவருக்கு ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இரண்டுமே ஒரே தேதிகளில் இருந்ததால் அண்ணாத்த படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து கவலையுடன் தெரிவித்தார். ரஜினியின் தீவிர ரசிகையான தீபா இந்த வாய்ப்பை மிஸ் செய்ததை நினைத்து வருத்தப்பட்டாலும் அவர் நடித்த டாக்டர் படம் நல்ல பெயரை பெற்று கொடுத்ததை பற்றி கூறியிருந்தார். கடவுளின் ஆசிர்வாதத்தால் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தெரிவித்தார்.
தீபா கொடுத்த அறிவுரை :
தன்னுடைய வேலையை மிகவும் நேசித்து செய்து வருவதாகவும், தான் நடிக்கும் கேரக்டர்கள் மீது எந்த பாகுபாடும் காட்டுவதில்லை என தெரிவித்தார். கதை கேட்டு படங்களை தேர்வு செய்வதில்லை என்றும் அது சிறிய பட்ஜெட் படமா அல்லது பெரிய பட்ஜெட் படமா என்று எல்லாம் பிரித்து பார்ப்பதில்லை என தெரிவித்தார். இன்றும் மனப்பாடம் செய்துதான் வசனங்களை பேசி வருவதாக தெரிவித்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சீரியஸாக தன்னுடைய முழு உழைப்பையும் கொடுக்க வேண்டும் என வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அறிவுரை கொடுத்தார்.
பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லாமல் தனக்கு கொடுக்கப்படும் கேரக்டர்களை எந்த ஒரு குறைவும் இல்லாமல் சிறப்பாக நடித்து கொடுப்பதையே தன்னுடைய குறிக்கோளாக வைத்து சிறப்பாக திரைத்துறையில் பயணித்து வருகிறார். பல பெண்களுக்கும் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் நடிகை தீபா ஷங்கர்.