சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அவரின் கணவர் ஹேம்நாத் புகார் கூறிய நிலையில், இந்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய விசாரணையில் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த வழக்கை கிடப்பில் போட்டனர். தற்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சித்ரா தற்கொலை செய்வதற்கு முன்பு, பெரம்பலூரில் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து, அப்போதைய அதிமுக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்து கொடுத்த தொந்தரவின் காரணமாக தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
தற்போது ஆட்சி மாறியதால், முன்னாள் எம்எல்ஏவை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், தற்போதைய அரசு இந்த வழக்கை விசாரிக்க முழு சுதந்திரம் கொடுத்ததும் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அரசியல்வாதி ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் ஹேம்நாத் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹேம்நாத், சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதியின் தொடர்பு இருப்பதாகவும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அவர் அளித்திருக்கிறார். இதனால், சித்ரா மரண வழக்கில் பல மர்மங்கள் இருப்பது உறுதியானது.
சித்ராவின் மரணத்துடன் தொடர்புடைய அரசியல்வாதியின் பெயரை வெளியிட மறுத்த ஹேம்நாத், தகவலை மற்றும் பகிர்ந்தார். இது சம்பந்தமாக வேறு ஏதேனும் தகவலை வெளியே சொன்னால், தனது உயிருக்கு பாதிப்பு இருக்கும் என தெரிவித்திருந்தார். இதனால், காவல் துறையினர் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், சித்ராவின் மரணத்தை திட்டமிட்டு செய்த மாஃபியா கும்பலை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்