ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் பிரபல நடிகை முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 






சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இணைந்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவிக்கு கமர்ஷியலாக மீண்டும் ஒரு வெற்றி தேவைப்படுவதால் அவர் இப்படத்தை பெரிதும் நம்பியுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். 






நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு  ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கொண்டாடிய போட்டோ, வீடியோக்கள் வெளியாகி படத்தில் அவர் இணைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. 






பஞ்சாப்பை சேர்ந்த நடிகை பூமிகா சாவ்லா 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் விஜய் நடித்த பத்ரி படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படத்திலும் பூமிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.