நடிகை ஸ்ரீதேவியை பார்த்து தான் சினிமாவில் நடிக்க வந்த பிரபல நடிகை பாக்யஸ்ரீ நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


1982 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தேவியின் திருவிளையாடல் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பாக்யஸ்ரீ. இவர் , மலையாளம் , தமிழ் , கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார். துணை நடிகையாக ஏராளமான படங்களில் சின்னத்திரையில் கல்யாண பரிசு, அபூர்வ ராகங்கள், கல்யாண வீடு, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். 


இவர் நேர்காணல் ஒன்றில் தான் சினிமாவில் நடிக்க வந்தது பற்றியும், ஹீரோயினாக ஆசைப்பட்டு எடுத்த விபரீத முடிவு பற்றியும் பேசியுள்ளார்.


"எனக்கு சின்ன வயசிலேயே நடிகை ஸ்ரீதேவி அக்காவை பார்த்து நடிப்பதில் ஆசை இருந்தது. எங்க பெரியப்பா கன்னடத்தில் இயக்குநராக இருந்தார். அவரிடம் நடிப்பதற்கான விருப்பத்தை சொன்னவுடன் படத்தில் சின்ன கேரக்டர் ஒன்று கொடுத்தார். அப்போது சென்னையில் அனைத்து தென்னிந்திய மொழி படப்பிடிப்புகளும் நடைபெற்றது. அப்போது பெரியப்பா என்னை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்தார். நான் முதன்முதலில் மலையாளத்தில் தான் நடித்தேன். தமிழில் முதல் படமாக தேவியின் திருவிளையாடல் என் நடிப்பில் வெளியானது. 


அந்த படத்தில் நடிகை மனோரமாவுடன் இணைந்து நடித்தேன். அவர்கள் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தார். சினிமாவில் அதுதான் என்னுடைய ஆரம்பம் என்பதால் சாப்பாடு, தூக்கம் உள்ளிட்ட பல விஷயங்களில் அறிவுரை வழங்கினார். நான் ஹீரோயினாக வருவதற்காக 14 வயதில் குண்டாக வேண்டும் என ஊசி போட்டேன். அப்ப ஹீரோயின் எல்லாம் பப்ளியா இருப்பாங்க. நான் கொஞ்சம் ஒல்லியாக இருப்பேன். குண்டாகி வர்ற சமயம் நான் ஹீரோயினாக நடிச்சேன். அதன்பிறகு குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டேன். 


ஆனால் அந்த ஊசியின் விளைவுகள் பிரசவத்திற்கு பிறகு தெரிய வந்தது. நீ ஒல்லியா இருக்க, வெயிட் போட வேண்டும் என சொன்னார்கள். மருத்துவர் எச்சரிக்கை விடுத்தும் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே ஊசி போட்டுக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பாக்யஸ்ரீ செய்தது குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.