குழந்தையாக இருந்ததில் இருந்து நடித்து வந்தாலும் சினிமாவில் சரியான வாய்ப்பு அமையவில்லை என நடிகை பேபி அஞ்சு வருத்தம் தெரிவித்துள்ளார். 


மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி அஞ்சு. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய அவர், கேளடி கண்மணி, அரங்கேற்ற வேளை, ஆதித்யன், கோபாலா கோபாலா, பூ மகள் ஊர்வலம், உனக்காக எல்லாம் உனக்காக, என்றென்றும் காதல்,வீராப்பு, பொல்லாதவன் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்தார். 


இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய பேபி அஞ்சு, “நான் சின்ன வயதில் நடிக்க வேண்டும் என நினைத்ததில்லை. என்னுடைய அத்தை ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். அப்படத்தின் 100வது நாள் விழாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். அப்போது எனக்கு ஒன்றரை வயது. என்னை பார்த்து விட்டு இயக்குநர் மகேந்திரன் அவர் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என பிடிவாதமாக கேட்டார். குழந்தை என்பதால் என்ன வந்ததோ அதையே ஷூட் செய்தார். உதிரிப்பூக்கள் தான் என்னுடைய முதல் படம். 


நான் சின்ன வயதில் இருந்து நடிக்கிறேன். ஆனால் ஏன் பெரிதாக வாய்ப்பு வரவில்லை என தெரியவில்லை. இவ்வளவு பணம் கொடுத்தால் தான் நடிப்பேன் என சொல்வதில்லை. இந்த கேரக்டர் வேண்டும் என கேட்க மாட்டேன். ஆனால் என்னை ஏன் ஒதுக்குகிறார்கள் என தெரியவில்லை. அம்மா இறந்ததால் வீராப்பு, பொல்லாதவன் படங்களுக்கு பிறகு 8 ஆண்டுகள் நடிக்கவே இல்லை. திறமையான நடிகர்கள் இல்லை என சொல்கிறார்கள். இருக்கிற நடிகர்களை ஏன் பயன்படுத்த மாட்டேங்கிறார்கள் என்று தான் கேட்கிறேன். இப்போது ஒரு படம் பண்ணுகிறேன். அது முடிந்ததும் மீண்டும் பிஸியாகி விடுவேன் என நம்புகிறேன். 


என்னுடைய திருமணம் நடந்ததும் விபத்து தான். 17 வயதில் திருமணம் நடந்தது. நடிப்பதற்கும் பெரிய அளவில் விருப்பமில்லை. மலையாளத்தில் தான் அதிகம் நடித்தேன். தமிழில் தங்கை, துணை கேரக்டர்கள் கிடைக்கவும் வாய்ப்புகளை மறுத்தேன். தமிழில் நான் குண்டாக இருக்கிறேன் என சொன்னார்கள். மலையாள சினிமாவில் ஏற்றுக்கொண்டார்கள். இங்க வெளித்தோற்றத்தை தான் பார்த்தார்கள். நான் எதிர்பார்த்தது தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. காரணம் தெரியாமல் தவித்தேன். அதனால் நடிப்பு வரவில்லை. குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம் என நினைத்தேன். 


நான் உடல் எடை குறைத்து பார்த்தாலும் சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்டது. நடிப்பு முக்கியம் தான். அதைவிட உடல் ஆரோக்கியமும் முக்கியம். எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட சமயத்தில் குஷ்பூ, மீனா அதிக எடையுடன் தான் இருந்தார்கள். சிலர் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைக்க நினைத்தபோதும் எனக்கு அதில் விருப்பமில்லாமல் இருந்தது. மேலும் மலையாளத்துல் உடல் எடையை எல்லாம் ஒரு பொருட்டாக கருதவே இல்லை.