மலையாள சினிமாவில் கொடுக்கப்படும் கேரக்டர்கள் தரமானதாக இருப்பதாக நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தெரிவித்துள்ளார்.
லிஃப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவின் அடுத்ததாக நடித்துள்ள படம் மாஸ்க். அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு நடிகை ருஹானி சர்மாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் சார்லி, பால சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும்,பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் நவம்பர் 21ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த நிலையில் இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை ஆண்ட்ரியா பேசியது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
அதாவது ஒரு நிகழ்வில் பேசிய ஆண்ட்ரியா ஜெரேமியா, "மலையாள திரையுலகில் எழுதப்பட்ட கதாபாத்திரங்களின் தரம் அசாதாரணமானதாகும். எனக்கு மட்டும் அந்த மொழி சரளமாகத் தெரிந்திருந்தால், நிச்சயம் நான் அங்கு சென்று நடித்து கேரளாவிலேயே குடியேறியிருப்பேன்" என தெரிவித்தார். மேலும் மலையாள சினிமாவில் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, கதைகளில் காணப்படும் மனிதநேயம் மற்றும் நடிப்புத் திறனை மதிக்கும் கலாச்சாரம் ஆகியவையே தனக்குள் இந்த எண்ணத்தை உருவாக்கியது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மாஸ்க் படம் எதிர்பார்த்ததைப் போல பெரிய வெற்றி பெற்றால், நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தாமதமாகும் பிசாசு 2 படத்தை வெளியிட தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் தான் முன்னேறி வருவதாகவும், பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் ஆண்ட்ரியா கூறியுள்ளார். அதேசமயம் சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்' என்று சொல்வது தவறானதாகும். அந்த வார்த்தை மாற்றப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உடனடியாக மலையாளம் மற்றும் ஹாலிவுட் திரையுலகை குறிப்பிட்டு பேசிய ஆண்ட்ரியா, அங்கெல்லாம் ஒரு படத்தில் முன்னணி கேரக்டரில் நடித்திருந்தாலும் அடுத்த படங்களில் எதைப் பற்றியும் யோசிக்காமல் துணை வேடங்களில் நடிப்பார்கள். கதையில் தனக்கு பிடித்த வேடம் என்றால் அது முன்னணி கேரக்டரா, துணை வேடமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. இதனால் ரூ.4 கோடியில் எடுக்கப்படும் ஒரு படம் ரூ.100 கோடி கூட வசூல் செய்யலாம். இவை அனைத்தும் மலையாளத்தில் மட்டுமே சாத்தியம் எனவும் ஆண்ட்ரியா ஜெரேமியா கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.