அரசியல் களத்தில் நம்மை நேசிப்பவர்களை நாம் தான் பாதுகாப்பாக வழி நடத்த வேண்டும் என நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா பதிலளித்துள்ளார்.
நடிகையும், ஆந்திர மாநில அரசியலின் முக்கிய நபருமான ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் ‘லெனின் பாண்டியன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துக் கொண்டார். அப்போது ரோஜாவிடம் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் பற்றி கேள்வி எழுப்பட்டது.
அதற்கு, “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறும் எனவும், மாறாது எனவும் சொல்ல முடியாது. அரசியலைப் பொறுத்தவரை ஒரு நடிகர், நடிகை மீது அன்பு, பாசம் என்பது வேறு. வாக்கு என்பது வேறாகும். அந்த ஓட்டு கிடைக்க வேண்டும் என்றால் அரசியல் கட்சி தேர்வு செய்யும் வேட்பாளர், அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் மற்ற கட்சிகள், அதிகாரத்துக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் ஆகியவை அடிப்படையில் மக்கள் நம்ப வேண்டும். அந்த ஃபார்முலா எனக்கு தெரிந்தால் நானே ஒரு கட்சியை தொடங்கியிருப்பேன்.
கரூரில் தவெக தேர்தல் பரப்புரையின்போது 41 பேர் இறந்து விட்டார்கள் என திட்டுகிறீர்கள். இதில் அவர் நேராக சென்று பார்க்கும்போது எதுவும் நடந்து விட்டால் என்ன செய்வது சொல்லுங்கள். குறை சொல்ல வேண்டும் என்றால் எப்படினாலும் சொல்லலாம். பிரபலங்களை நேரில் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்போது ஆசை இருக்கும். செல்ஃபி, கையெழுத்து வாங்க என முயற்சிப்பார்கள். இதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த கட்சியின் நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு குழு அமைக்க வேண்டும்.
எது நடந்தாலும் விஜய் மேல் தான் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் விஜய்யும், தமிழக அரசும் ஒருவரையொருவர் கைகாட்டி எஸ்கேப் ஆகி விட்டார்கள். இறந்து போன குடும்பத்திற்கு யார் ஆறுதல் சொல்வார்கள்?. அந்த குடும்பம் ஆதரவின்றி நிற்கிறது. அதைப் பற்றி யோசிக்க வேண்டும். ஆந்திராவைப் பொறுத்தவரை ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரபலங்களை விட அதிக கூட்டம் வரும். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது சரியான பாதுகாப்பு கொடுக்க மாட்டார்கள்.
நாம் தான் நம்மை நேசிப்பவர்களை பாதுகாப்பாக வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் - விஜய் என வரும்போது மக்கள் தான் முடிவு செய்ய முடியும் எனவும் ரோஜா கூறினார். தொடர்ந்து அவரிடம் பீகார் தேர்தல் முடிவுகள் பற்றியும், பாஜக வெற்றி பெற்றது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் ஏதோ நிம்மதியா இருக்கலாம் நினைச்சேன். ஆந்திராவில் பிரச்னை என்றால் தமிழ்நாட்டிலும், இங்கு பிரச்னை அங்கு போவேன். நீங்க எனக்கு மொத்தமாகவே ஆப்பு வச்சா நான் எங்க போய் இருக்கிறது சொல்லுங்கள் என நகைச்சுவையாக கூறினார்.
அரசியலை பொறுத்தவரை இறங்கி உழைப்பாளி போல வேலை செய்ய வேண்டும். அரசியலில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்து தான் அந்த அரசியல் வாழ்க்கை அமையும். அதனால் சிரஞ்சீவி மற்றவர்களை சார்ந்து இருந்ததால் தான் அரசியலில் தோல்வியடைந்தார். களத்தில் நிலைத்து நிற்க முடியவில்லை. விஜயகாந்த் மாதிரி ஒவ்வொரு தேர்தலாக போட்டிப்போட முடியவில்லை. வந்தவுடன் முதலமைச்சர் ஆக வேண்டும் என நினைத்தால் அது சினிமாவில் தான் முடியும்.
நிஜ வாழ்க்கையில் முடியாது. சிரஞ்சீவிக்கு பொறுமை இல்லாமல் இருந்தது. இல்லாவிட்டால் நிச்சயம் அவர் முதல்வராக வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். எம்ஜிஆர், என்.டி.ஆர் மாதிரி சிரஞ்சீவியை எதிர்பார்த்தார்கள். விஜய் சரியான திட்டத்துடன் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது கடைசி 2 மாதங்களில் தான் தெரியும்” என ரோஜா கூறியுள்ளார்.