கருவுற்றிருப்பதாக அறிவித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அமலா, தற்போது தனது வளைகாப்பு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.


அமலா பால்


நடிகை அமலா பால் தனது முதல் குழந்தையை வரவேற்கும் நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் ஜெகத் தேசாய் என்பவருடனான தனது காதலை பொதுவெளியில் வெளிப்படுத்தினார் . இதனைத் தொடர்ந்து அடுத்த மாதத்தில்  அவரை கேரள கோயிலில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தான் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார்.


முதல் திருமணம்


இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்த அமலா பால் அவரை கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் காரணமாக இந்த திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு வெளியேறினார். இந்த நிகழ்வு அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரைவாழ்க்கையிலும் வெளிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.


ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அமலா பால் சோலோவாக நிறைய படங்களில் நடிக்கத் தொடங்கினார். விவாகரத்திற்கு பிறகு பல்வேறு அவதூறுகள் அவர் மீது சுமத்தப்பட்டபோதிலும் எதையும் கண்டுகொள்ளாமல் நடிப்பு , பல்வேறு நாடுகளுக்கு பயணம் என தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடர்ந்தார்.


இப்படியான நிலையில்  அவரது திருமணமும் , அவர் கர்ப்பமாக இருப்பது அறிந்து ரசிகர்கள் பெரும் ஆதரவையும் அன்பையும் கொடுத்து வருகிறார்கள்.


வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்த அமலா பால்






தற்போது 7 மாத கால குழந்தையை கருவில் சுமந்து மகிழ்ந்திருக்கும் அமலா பால், தொடர்ந்து ஆன்மிகப் பயணம், பேபி மூன் பயணம் என தன் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் செலவழித்து புகைப்படங்கள் பகிர்ந்து ரசிகர்களுடன் இணையத்தில் உரையாடி வருகிறார். இன்று அமலா பாலுக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 


ஆடு ஜீவிதம்


அமலா பால் , பிருத்விராஜ் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகளவில் 75 கோடிகளுக்கும் மேலாக இப்படம் வசூல் செய்துள்ளது. இப்படத்தில் அமலா பாலின் கதாபாத்திரம் சிறிது நேரமே வந்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது.