‘மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மிக்ஜாம் புயல் தற்போது சென்னையிலிருந்து வடகிழக்கு திசையில் 120 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு தென்கிழக்கு திசையில் 90 கிலோ மீட்டர் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையைவிட்டு விலகிச்செல்லும் மிக்ஜாம் புயல், தற்போது ஆந்திராவின் நெல்லூர் நோக்கி நகர்ந்து வருவதாகவும், மிக்ஜாம் புயலானது நாளை முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


இப்படியான நிலையில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னை சின்னாபின்னமாகி விட்டது என்றே சொல்லலாம். நகரின் பல இடங்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் விமான சேவை, ரயில் சேவை, பேருந்து சேவை, புறநகர் ரயில் சேவை என அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட ஒன்றரை நாட்களாக பெய்த மழை சென்னையின் பல இடங்களிலும் நின்று விட்டது. 


இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில்கள் மட்டும் ஞாயிறு அட்டவணையின்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் தேங்கியுள்ள நீரின் அளவை பொறுத்து பேருந்துகள் இயக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ‘மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவரும் தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேபோன்று வசதியும் மனமும் படைத்த பலரும் நிதி, பொருள் என உதவிகளுடன் அரசின் உதவிகளும் சேரும் போது, பாதிக்கப்பட்டோருக்கு பெருமளவு பயன்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே, மிக்ஜாம் புயலின் பாதிப்பிற்கு சூர்யாவும் கார்த்தியும் தொடங்கி வைத்துள்ள நிதி உதவியைப் போல், நல்லுள்ளம் கொண்டோர் அரசு நிவாரண நிதிக்கு உதவிகளை அனுப்பி, பாதிக்கப்பட்டோருக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.