நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா பற்றி பேசப்பட்டு வரும் நிலையில் நடிகர் யோகிபாபு பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அயோத்தி ராமர் கோயில் நேற்று கோலாகலமாக திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த கோயிலின் கருவறையில் உள்ள குழந்தை ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். இந்த பூஜையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். அதேசமயம் விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல்துறை சார்ந்த முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 






அதன்படி ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியாபட், ஹ்ருத்திக்ரோஷன், தனுஷ், கங்கனா ரணாவத், அனுபம் கெர், பாடகர் ஷங்கர் மகாதேவன், ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் அயோத்திக்கு வருகை தந்து ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தங்கள் மனமகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் அழைப்பிதழ் கொடுத்தும் நிறைய பேர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, நடிகர் யோகிபாபு ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை. 


இதற்கிடையில் நடிகர் யோகிபாபுவின் சமூக வலைத்தளப் பதிவுகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த ஜனவரி 21 ஆம் தேதி பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நடிகர் யோகிபாபுவை நேரில் சென்று அழைத்ததாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரை போன்று யோகிபாபுவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்படி இருக்கையில் நேற்று இரவு அயோத்தி கோயிலில் வீற்றிருக்கும் குழந்தை ராமர் படத்தை பகிர்ந்து “ஜெய் ஸ்ரீராம்” என யோகிபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 






 


பலரும் அவருக்கு பாராட்டுகளையும், கிண்டலான கருத்துகளையும் தெரிவித்தனர். இப்படி இருக்கையில் அடுத்த சில மணி நேரங்களில் யோகிபாபு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கடவுள் முருகனின் வேல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது. ஏற்கனவே தீவிர முருக பக்தரான யோகிபாபு தனது எக்ஸ் வலைத்தளத்தில் முருகனுடன் இருக்கும் படத்தை டி.பி. ஆகவும், முருகன் போட்டோவை கவர் பிக்சர் ஆகவும் வைத்திருப்பார். மேலும் அடிக்கடி ஒவ்வொர் ஊரிலும் உள்ள பிரசித்த பெற்ற முருகன் கோவிலுக்கும் செல்வதையும் வழக்கமாக வைத்திருப்பதையும் கொண்டுள்ளார்.