பிரபல இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சின்னத்திரையில் நடிகராக அறிமுகமாகி, தற்போது பெரிய திரையில் முன்னணி காமெடி நடிகராக உள்ளவர் யோகிபாபு. பருமனான உடல்,  வித்தியாசமான ஹேர்ஸ்டைல் என தோற்றத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர், பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கோலமாவு கோகிலா, கூர்கா,தர்மபிரபு, யானை முகத்தான், பேய் மாமா, பன்னிக்குட்டி,  மண்டேலா, பொம்மை நாயகி என சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். 


அந்த வகையில் யோகிபாபு, அடுத்ததாக இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும், இதனை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன் இருவரும் வெளியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


சிம்புதேவனின் திரைப்பயணம் 


கார்ட்டூனிஸ்ட் ஆக தனது வாழ்க்கையை தொடங்கிய சிம்புதேவன், காமெடி நடிகர் வடிவேலு ஹீரோவாக அறிமுகமான ‘இம்சை அரசன்’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். சமகால அரசியலை என்றைக்கும் மக்கள் ரசிக்கும்படி வெளியான இப்படம் சூப்பர்ஹிட் அடித்தது. தொடர்ந்து ‘அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கண்ணியும் மூன்று களவாணிகளும், புலி, கசடதபற, விக்டிம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 






இதில் இம்சை அரசன் படம் தவிர்த்து மற்ற எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை கையாண்டதால் சிம்புதேவன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். இப்படியான நிலையில் 2019 ஆம் ஆண்டு இம்சை அரசன் படத்தின் 2ஆம் பாகமாக ‘24ஆம் புலிகேசி’ படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 


ஆனால் சிம்புதேவனுக்கும், வடிவேலுக்கும் இடையே கதையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இந்த பிரச்சினை இதுவரை தீர்வுக் காணப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.