தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வந்தவர் விவேக். கடந்த 2021ம் ஆண்டு விவேக் உயிரிழந்தாலும் அவரது நகைச்சுவை காலத்திற்கும் அழியாத புகழ்பெற்றவையாக உள்ளது. நகைச்சுவை நடிகராக இருந்தாலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் தனது கடைசி காலத்தில் நடிக்கத் தொடங்கியிருந்தார். 

Continues below advertisement

சின்னக்கலைவாணர் விருது கிடைத்தது எப்படி?

விவேக்கின் நகைச்சுவையில் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறப்பட்டிருக்கும். சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை, ஜாதி மத பாகுபாடின்மை போன்ற பல விஷயங்களை தனது நகைச்சுவை மூலம் கொண்டு சென்றிருப்பார். அவரது நகைச்சுவைத் திறனை பாராட்டி அவரை ரசிகர்கள் சின்னக் கலைவாணர் என்று அழைக்கின்றனர். விவேக்கிற்கு சின்ன கலைவாணர் என்ற பட்டம் எப்படி கிடைத்தது  தெரியுமா?

Continues below advertisement

1987ம் ஆண்டு நடிகராக அறிமுகமான விவேக் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்திருந்த சமயத்தில் 2000ம் ஆண்டு பிரபு, கரண், உதயா ஆகியோருடன் விவேக் நடித்திருந்த திருநெல்வேலி படம் வெளியானது. இந்த படத்தில் விவேக்கின் காமெடி மிகவும் புகழ்பெற்றது. அதாவது, கிராமப்புறங்களில் மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பல கருத்துக்களை நகைச்சுவையாக அசத்தலாக நடித்திருப்பார் விவேக். 

கருணாநிதியின் பாராட்டு:

இந்த படத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தயாரிப்பாளரும், நடிகருமான அழகப்பன் திரையிட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த கருணாநிதி என்னய்யா பெரியார் மேட்டர் எல்லாம் பெருசா பேசிருக்கீங்க என்று பாராட்டியுள்ளார். பின்னர். தி.க. தலைவர் கி.வீரமணியை போன் மூலமாக அழைப்பு விடுத்த கருணாநிதி, பெரியார் விஷயத்தை பெரிதாக செய்துள்ளார் விவேக். அவருக்கு ஒரு விருது கொடுங்கள் என்று பரிந்துரை செய்துள்ளார்.

கருணாநிதியே நேரடியாக பரிந்துரை செய்ததன் பேரில் அவருக்கு சின்னக் கலைவாணர் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த தகவலை படத்தின் இயக்குனர் பாரதிகண்ணன் சித்ரா லட்சுமணனுடன் ஒரு நேர்காணலுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

இந்த படத்தில் விவேக் உங்களை எல்லாம் ஒரு பெரியார் இல்லடா.. ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது என்று வசனம் பேசியிருப்பார். அந்த வசனம் தற்போது வரை மிகவும் பிரபலம் ஆகும். விவேக்கிற்கு சின்னக்கலைவாணர் விருது கிடைக்க இந்த வசனமும் மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது. மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தன்னுடைய படங்களில் பெரும்பாலான நகைச்சுவையை விவேக் செய்திருப்பார். அது ரசிகர்களை ரசிக்கும்படியாக மட்டுமின்றி சிந்திக்கும்படியாகவும் தற்போது வரை உள்ளது.

முன்னணி நடிகர்:

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனுடம் இணைந்து விவேக் நடித்துள்ளார். மேலும், விவேக் அப்துல்கலாமின் சீடராகவே இருந்து வந்தார். அவரது கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் சென்றதுடன், ஏராளமான மரக்கன்றுகளையும் நடும் சமூக சேவை பணியையும் மேற்கொண்டவர். சமூக நலனில் அக்கறை கொண்ட விவேக் பொது நல விழிப்புணர்வு விஷயங்களிலும் அடிக்கடி பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தார்.