விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நடித்துள்ள ஓஹோ எந்தன் பேபி திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஷ்ணு விஷால் இந்த படத்தை தயாரித்துள்ளார். சினிமாவில் தான் எதிர்கொண்ட கஷ்டங்களைப் பற்றியும் தனது விவாகரத்து பற்றியும் விஷ்ணு விஷால் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்
9 படங்கள் ட்ராப்
" சினிமாவில் நடிக்க வருவதென்பது என்னுடைய ஆசையாக எப்போதும் இருந்ததில்லை. எனக்கு கிரிக்கெட்டராக வேண்டும் என்றுதான் ஆசை. என்னுடைய அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து தான் வலுக்கட்டாயமாக சினிமாவிற்குள் என்னை தள்ளிவிட்டார்கள். என்னுடைய முதல் படம் வெண்ணிலா கபடி குழு படத்திற்கு ஏழு ஆண்டுகள் நான் முயற்சி செய்திருக்கிறேன் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்திருக்கிறேன். நான் முதலில் நடிக்க வேண்டிய படம் நான். எந்த காரணமும் சொல்லாமல் என்னை அந்த படத்தில் இருந்து தூக்கினார்கள். பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் நான் நடிக்க இருந்தேன். அதுவும் நடக்கவில்லை. அதன்பிறகு சினிமா வேண்டாம் என்று சொல்லிவிட்டு நான் வேறு வேலையில் சேர்ந்து விட்டேன். அப்போது தான் வெண்ணிலா கபடிக் குழு தயாரிப்பாளர் எனக்கு ஃபோன் செய்தார். ஆனால் படப்பிடிப்பிற்கு ஒரு மாதம் முன்பாக தயாரிப்பாளர் தன்னிடம் பணம் இல்லை என்று என்னை பணம் தயார் பண்ண சொன்னார். என்னுடைய தந்தைக்கு தெரிந்த ஃபினான்சியர் மூலம் அந்த படத்தை தயாரித்தோம்.
பிரபு சாலமன் செய்த துரோகம்
பிரபு சாலமன் இயக்கிய காடன் படத்தில் முதல் பாதியோடி ரானா டகுபதி கேரக்டர் இறந்துவிடுவார். அதன் பிறகு நான் தான் அந்த படத்தில் ஹீடோ. ஆனால் ரிலீஸூக்கு முன்பு தான் தெரிந்தது படத்தின் என்னுடைய காட்சிகள் முதல் பாதியோடு நீக்கப்பட்டுவிட்டன. இதையும் பிரபு சாலமன் என்னிடம் சொல்லவில்லை. இன்னொருவர் சொல்லிதான் தெரிந்துகொண்டேன். இருந்து அந்த படத்திற்கு எல்லா ப்ரோமோஷன்களும் செய்தேன். அதன்பிறகு பிரபு சாலமனிடம் ஒரு வார்த்தைகூட நான் பேசியதில்லை. நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ராட்ச்சசன் படத்திற்கு பின் நான் நடிக்க இருந்த 9 படங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக ட்ராப் ஆகின. இதற்கிடையில்தான் எனக்கு விவாகரத்து நடந்தது. ஒரு கஷ்டத்தின் போது தான் எல்லா கஷ்டமும் சேர்ந்து வரும் என்பார்களே அப்படிதான் எனக்கு நடந்தது. எனக்கு இப்படி நடக்கக் கூடாது என்பதற்காக தான் என்னுடைய படங்களை நானே தயாரிக்க ஆரம்பித்தேன். " என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்