முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்.

Continues below advertisement


விஷ்ணு விஷால்


வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையிலான எளிய கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர். மாஸான நடிகராக மாற வேண்டும் என்பது தனது நோக்கம் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார். ஜீவா, மாவீரன் கிட்டு, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட வெற்றிப் படங்கள் இவருக்கு அமைந்துள்ளன.


சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இவர் நடித்த லால் சலாம் படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. 


மூன்றாவது முறையா கூட்டணி






இயக்குநர் ராம்குமார் இயக்கி முண்டாசுப்பட்டி , ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. காமெடியான படமாக முண்டாசுப்பட்டி அமைந்தது என்றால், சைக்கோ த்ரில்லராக உருவான ராட்சசன் படம்  ரசிகர்களை மிரளவைத்தது.


இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக ராம் குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி இணைந்துள்ளது. லால் சலாம் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் 21ஆவது படமாகும்.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இப்படம் தவிர்த்து 2022ஆம் ஆண்டில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்தும் படத்தைத் தயாரிக்கவும் இருக்கிறார். இப்படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11ஆவது தயாரிப்பாக (VVS11) உருவாகிறது. 


பெரும் பொருட்செலவில், பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும்.  குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக இது இருக்கும் என்றும்,  படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழு தகவல் முன்னதாக தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.