இந்தியாவில் வெறுப்புணர்வு காட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் “லால் சலாம்” படம் உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர்.நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வும் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீசாகிறது.
இதனிடையே லால் சலாம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், “கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தியா பெயரை பாரதம் என மத்திய அரசு சொல்வதை வைத்து நான் ட்வீட் போட்டேன். சின்ன வயசுல இருந்து இந்தியா, பாரதம் எல்லாம் ஒன்று தானேன்னு தானே படிச்சிருக்கோம். அதனை நான் பதிவு பண்ணேன். அந்த ட்வீட் மிகப்பெரிய அளவில் வைரலாகி பயங்கரமான கமெண்டுகள் வந்தது. நான் இதுவரை அரசியல் சார்ந்த பதிவுகளை போட்டதில்லை. எனக்கு அரசியல் பற்றி துளியும் அறிவும் இல்லை.
ஆனால் அந்த பதிவு ஒரு இந்திய குடிமகனாக என்ன தோன்றியதோ அதை பதிவு செய்தேன். எனக்கு அது தப்பாக தெரியவில்லை. என்னோட கருத்தை சொல்ல ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு வந்த எதிர்ப்பை பார்த்தால் இரண்டு நாட்களில் நான் ஆன்டி இந்தியன் ஆகிட்டேன், ஆன்டி ஹிந்து ஆகிட்டேன். என்னுடைய மனைவி ஜூவாலா கட்டாவின் அம்மா சீனாவைச் சேர்ந்தவர் என்பதால் நான் இந்த ஊரே இல்லைன்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஒன்னுமே புரியவில்லை.
ஒரு பதிவை கூட என்னால சுதந்திரமா போட முடியவில்லையே என யோசிச்சேன். ஏன் இவ்வளவு வெறுப்பு இருக்குன்னு தெரியல. ஒவ்வொருவருக்கும் கருத்து என்பது மாறலாம். அதனை நாம் மதித்து தான் ஆக வேண்டும். அதுதானே மனிதநேயம். எனக்கு ஒரு பிடிச்சிருக்கு, பிடிக்கல என்பதற்காக ஒருவரை இறக்கி பேசக்கூடாது. ஆனால் இந்த விஷயம் எனக்கு வித்தியாசமாக இருந்தது. நம்ம நாட்டுல இந்த மாதிரி வெறுப்பை காட்டுபவர்கள் பரவிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதிகம் காணப்படுகிறது. ஆனால் நம்மை சுற்றியிருக்கும் மனிதர்களிடம் பேசும்போது அப்படி எதுவும் இல்லை. அப்படியென்றால் சமூக வலைத்தளங்களில் மட்டும் தான் வெறுப்பு பிரச்சாரம் உள்ளதா? இல்லையா? என்ற கேள்வி உள்ளது. லால் சலாம் படம் அதைத்தான் பேசும்" என விஷ்ணு விஷால் தெரிவித்தார்.
விஷ்ணு விஷால் என்ன சொன்னார்?
கடந்தாண்டு இந்தியா என்ற பெயரை மத்திய பாஜக அரசு பாரதம் என குறிப்பிட்டது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இந்த சம்பவத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனை குறிப்பிட்டு ட்வீட் செய்த நடிகர் விஷ்ணு விஷால், இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா? என்று பதிவிட்டார்.