மதகஜராஜா
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாக வேண்டிய படம் மதகஜராஜா. இப்படத்தின் தயாரிப்பாளர் நிதி நெருக்கடியில் இருந்ததால் படம் 12 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது. தற்போது இந்த பொங்கலை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது மதகஜராஜா. சுந்தர் சி , விஷால் , சந்தானம் , விஜய் ஆண்டனி என ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் கூட்டமாக இந்த காம்போவை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் மதகஜராஜா திரைப்படம் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் விஷாலின் அடுத்தடுத்த படங்கள் மீதும் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
விஜய்க்கு எழுதிய கதையில் விஷால்
மதகஜராஜா படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஷால் தனது அடுத்த படத்தைப் பற்றிய அப்டேட் கொடுத்திருந்தார். அடுத்தபடியாக இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது இதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது . கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் நடிக்க இருந்த படம் யோஹன் : அத்தியாயம் ஒன்று. இந்தியாவைச் சேர்ந்த ஒரு அமெரிக்க சி.ஐ.ஏ க்கு வேலை ஏஜண்டாக வேலை செய்கிறார். அவரது அதிரடி சாகசங்களே இந்த படம். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க இருந்தார். ஈரோஸ் இப்படத்தை தயாரிக்க இருந்தது. இப்படம் ஹாலிவுட் படம் போலவே இருப்பதாகவும் தமிழ் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்காது என விஜய் கருதியதால் இப்படத்தில் இருந்து விஜய் விலகினார்.
தற்போது இதே கதையில் தான் நடிகர் விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்காக விஷால் மீண்டும் தன்னை ஃபிட்டாக மாற்றி செம ஸ்டைலான லுக்கில் ரெடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்